ஓஎஸ் மணியனின் கார் விபத்து.. கோவில் காம்பவுண்டில் மோதியது.. அதிமுக மாஜி அமைச்சருக்கு என்னாச்சு?
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் ஓஎஸ் மணியன் சென்ற கார் கோவில் சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சட்டசபை தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் ஓஎஸ் மணியன். இவர் முந்தைய அதிமுக ஆட்சியில் கைத்தறித்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார்.

இவர் தினமும் வேதாரண்யத்தில் இருந்து காரில் நாகப்பட்டினம் சென்று கட்சி பணிகளை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் தான் இன்று ஓஎஸ் மணியன் தனது காரில் வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி இன்று காரில் புறப்பட்டார்.
காரில் ஓஎஸ் மணியன் அமர்ந்து இருக்க அருண் என்பவர் காரை ஓட்டினார். திருப்பூண்டி - காரை நகர் இடையே ஓஎஸ் மணியனின் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று குறுக்கே ஸ்கூட்டியில் ஒருவர் வந்தார். இதையடுத்து ஸ்கூட்டி மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் வேகமாக திருப்பினார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், ஸ்கூட்டியில் மோதியதோடு, கோவில் சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓஎஸ் மணியன் உள்பட காரில் சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். சீட்பெல்ட் அணிந்து இருந்ததால் ஓஎஸ் மணியன் காயங்கள் ஏதுமின்றி தப்பித்தார்.
அதேவேளையில் ஸ்கூட்டியில் சென்ற சரவணன் என்பவர் தவறி கீழே விழுந்து காயமடைந்தார். அவர் திருப்பூண்டியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை என்பது அளிக்கப்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து ஓஎஸ் மணியனின் காரின் முன்பகுதி சேதமாகி இருந்தது.
இதையடுத்து மாற்று காரில் அங்கிருந்து புறப்பட்டு நாகப்பட்டினத்தில் உள்ள அதிமுக அலுவலகம் சென்றார். இந்த சம்பவம் திருப்பூண்டி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications