அனைத்து கட்சி கூட்டத்திற்கு வரமுடியாது என்பவர்கள் சிந்திக்க வேண்டும்.. மீண்டும் அழைத்த முக ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

நாகை: நாகையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மார்ச் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என்றும், திமுகவுக்கான பிரச்சனை அல்ல, தமிழ்நாட்டின் பிரச்சனை என்பதை சிந்தித்துப் பார்த்து கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாகையில் மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் இல்ல திருமண விழா, தளபதி அறிவாலயம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாகைக்கு சென்றுள்ளார்.

MK Stalin Nagapattinam

நாகையில் மாவட்ட திமுக செயலாளர் கவுதமன் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: மும்மொழிக் கொள்கையை கட்டாயப்படுத்தி கொண்டு வந்துவிட வேண்டும் என்று ஒன்றிய அரசு திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது.தொகுதி மறுசீரமைப்பையும் கொண்டு வந்து எப்படியாவது தமிழகத்தின் உரிமையை, அந்த எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அதனால் தான் மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 40 கட்சிகளுக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறோம். பெரும்பாலானோர் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட ஒரு சிலர் வர முடியாது என்று தெரிவித்துள்ளனர். வர இயல முடியாது என்பவர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது தனிப்பட்ட திமுகவுக்கான பிரச்சனை அல்ல.

இந்தக் கூட்டத்தை அரசியலாக்கப் பார்க்க கூடாது. தமிழகத்தின் உரிமை இது. 39 எம்பிக்களை வைத்துக் கொண்டு போராடிக் கொண்டிருக்கிறோம். அதையும் மீறி சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால்தான் நம்முடைய எண்ணங்களை நிறைவேற்ற முடியும். இந்த விழாவின் மூலமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சியினரும் வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.

இதிலே கெளரவம் பார்க்காதீர்கள். இது தமிழ்நாட்டின் பிரச்சனை என்பதை சிந்தித்துப் பார்த்து கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். பின்னர், தளபதி அறிவாலயத்தை திறந்து வைக்கவுள்ளார். பின்னர், தளபதி அறிவாலயத்தில் நடைபெறும் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மாலை 4 மணிக்கு கலந்துகொள்ள உள்ளார். கூட்டத்தை முடித்துவிட்டு நாகையில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு கார் மூலமாக முதல்வர் செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் டிரோன் கேமரா பறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகை மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளார். இதனையொட்டி இன்று திருவாரூர் மார்க்கமாக நாகைக்கு செல்ல இருப்பதால் திருவாரூர் மாவட்டத்தில் முக்கிய விருந்தினர்கள் செல்லும் வழித்தடத்தை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் சிவில் ரிமோட் பைலட் விமான அமைப்பு மற்றும் டிரோன் கேமரா போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+