நாகை டூ இலங்கை கப்பல்.. காத்திருந்தவர்களை ஏமாற்றிய “சிரியா பாணி”.. முதல் பயணம் 12ம் தேதி ஒத்திவைப்பு
நாகை: இலங்கை காங்கேசந்துறைக்கு நாகப்பட்டினத்தில் இருந்து இன்று தொடங்கப்பட இருந்த பயணிகள் கப்பல் சேவை 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணிகள் கப்பல் சேவை நாகப்பட்டினம் சிறு துறைமுகத்தில் இருந்து, 60 கடல் மைல் தொலைவில் இருக்கும் இலங்கையின் காங்கேசந்துறைமுகத்திற்கு செல்லும் என கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. தமிழ்நாடு கடல்சார் வாரியம் மற்றும் மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை மற்றும் வெளியுறவுத் துறை மேற்கொண்ட இந்த முயற்சியின் மூலமாக நாகப்பட்டினம் துறைமுக கால்வாயை தூர்வாருதல், பயணியர் முனையம் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழ்நாடு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இது தொடர்பாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், "நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து, 60 கடல் மைல்கள் தொலைவில், இலங்கையிலுள்ள காங்கேசந்துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணியர் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு கடல்சார் வாரியம், ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை மற்றும் வெளியுறவுத் துறை மூலம் நாகப்பட்டினம் துறைமுக கால்வாய் தூர்வாருதல், பயணியர் முனையம் அமைப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய கப்பல் போக்குவரத்து கழகம், விரைவு பயணியர் கப்பல் போக்குவரத்தை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த பயணியர் கப்பல் பயணம், வெளிநாட்டு பயணம் என்பதால் ஒன்றிய அரசின் தொழிற்துறை பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கையாள ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினைத் துவக்க ஒன்றிய அரசு உத்தேசித்துள்ளது.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க பயணிகள் கப்பல் போக்குவரத்து, இலங்கை மக்கள் குறிப்பாக, தமிழ் மக்கள் தங்களின் கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள், வணிகம், ஆன்மீகம் மற்றும் சுற்றுலா ஆகிய தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைவதுடன், தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்கள் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பகுதிகள், கலாச்சாரப் பகிர்வு, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெறும்." என்றார்.
இந்த பயணத்துக்கு பயன்படுத்தப்படும் சிரியா பாணி கப்பல் கொச்சியில் தயாரிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை நாகை துறைமுகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்கான சோதனை ஓட்டம் 2 நாட்கள் நடைபெற்ற நிலையில், இன்று பயணிகளுக்காக கப்பல் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் 12 ஆம் தேதிக்கு இந்த முதல் கப்பல் பயணம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications