வேளாங்கண்ணி அருகே கஞ்சாவுடன் ஊராட்சி மன்ற தலைவர் கைது.. வாகனத்தை மறித்து கிராம மக்கள் போராட்டம்
நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதன் பேரில் போலீசார் விசாரிக்க சென்ற போது, கையில் கஞ்சா உடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் அந்த பகுதி பஞ்சாயத்து தலைவர் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே போலீசாரின் வாகனத்தை மறித்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் புதுப்பாலம் அருகே உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கீழையூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அவர்கள் தகவல் அறிந்து பிரதாபராமபுரம் புதுப்பாலம் பகுதிக்கு சென்று அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் கையில் பாலிதீன் பையுடன் நின்று கொண்டிருந்தார். சந்தேகத்தின் பேரில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் இருந்த பையில் சோதனை செய்தனர். அந்த பையில் 2 கிலோ 225 கிராம் கஞ்சா இருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் வேளாங்கண்ண்ணி அருகே உள்ள விழுந்தமாவடி பட்டி ரோடு பகுதியை சேர்ந்த மகாலிங்கம்(வயது 61) என்பதும், இவர் விழுந்தமாவடி ஊராட்சி தலைவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து விழுந்தமாவடி ஊராட்சி தலைவர் மகாலிங்கத்திடம் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த கீழையூர் போலீசார், மகாலிங்கத்தை கைது செய்து திட்டச்சேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.இதுகுறித்து தகவல் அறிந்த மகாலிங்கத்தின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், திட்டச்சேரி போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கைது செய்யப்பட்ட மகாலிங்கத்தை கீழையூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லாமல் ஏன் திட்டச்சேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளீர்கள்? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் விழுந்தமாவடி ஊராட்சி தலைவர் மகாலிங்கத்தை அங்கிருந்து வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் வாகனத்தில் அழைத்து சென்றனர். அப்போது திட்டச்சேரி போலீஸ் நிலையம் முன்பு திரண்டிருந்த மகாலிங்கத்தின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், மகாலிங்கத்தை அழைத்துச்சென்ற போலீஸ் வாகனத்தை மறித்தார்கள். கைது செய்யப்பட்ட மகாலிங்கத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் ஏன் ஒவ்வொரு போலீஸ் நிலையமாக அழைத்து செல்கிறீர்கள்? என கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications