இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் அட்டூழியம்..கோடியக்கரை அருகே மீனவர்களை தாக்கி பொருட்கள் கொள்ளை!
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கில் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 3 மீனவர்களை தாக்கி படகில் வைத்திருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு படகில் அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை தாக்கி, படகில் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, பேட்டரி, செல்ஃபோன், 20 லிட்டர் டீசல் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

முன்னதாக நேற்றும் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர். ஆறுகாட்டுத்துறைக்கு அருகில் இந்திய கடல் எல்லைப் பகுதியில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியும், இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டை ஆகியவற்றால் தாக்கி, பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
மீனவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி கருவிகளையும், மீன்களையும் கொள்ளையடித்தனர். இந்தத் தாக்குதலில் 11 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் இதேபோல் அப்பகுதியில் வேறு சில மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி, பொருட்களை பறித்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்தை தடுக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications