தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நடுக்கடலில் சரமாரி தாக்குதல்- இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்!
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூரமான தாக்குதல் நடத்தி உள்ளனர்.
நாகப்பட்டினம்: தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நடுக்கடலில் மர்ம நபர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தி ரூ5 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். நடுக்கடலில் கடற்கொள்ளையர்கள்தான் தாக்கியதாக இலங்கை தரப்பு குற்றம்சாட்டுகிறது.
தமிழ்நாடு மற்றும் இலங்கை தமிழ் மீனவர்களிடையேயான பிரச்சனையை ஊதிப் பெரிதாக்குவதில் இலங்கையில் உள்ள சீனா தூதரகம் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இலங்கை தமிழ் மீனவர்களுக்கு பல்வேறு நிதி உதவிகளையும் சீனா தூதரகம் வழங்கி வருகிறது.

தமிழ்நாடு, இலங்கை தமிழ் மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய பாஜக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இலங்கை பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தின் போது இருநாட்டு மீனவர் பிரச்சனைக்கு தீர்வாக இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் விரைவில் இந்தியா வருகை தரும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனவும் கூறப்பட்டது.
இந்த சூழ்நிலையில் திடீரென நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலை கடற்கொள்ளையர்கள் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான படகில் அவர் உட்பட 6 மீனவர்கள் கடந்த 14-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தமிழ்நாட்டு மீனவர்கள் கோடியக்கரைக்கு அருகே தென்கிழக்கு பகுதியில் நமது நாட்டு எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென 3 படகுகளில் வந்த 12 பேர் கொண்ட கும்பல் ஒன்று, தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. அவர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தமிழ்நாட்டு மீனவர்களைத் தாக்கினர். இதில் முருகன் என்ற தமிழ்நாட்டு மீனவரின் 3 விரல்கள் வெட்டுப்பட்டன. மேலும் சிலருக்கு தலை, கை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. மீனவர்களின் படகில் இருந்த ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்ட ரூ5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதனால் கரை திரும்பிய மீனவர்கள், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்தியது இலங்கை தமிழ் மீனவர்கள் அல்ல; கடற்கொள்ளையர்கள் என்கிறது இலங்கை தரப்பு. இது தொடர்பாக விசாரணை நடத்துவோம் என்கிறார் இலங்கை மீன்வளத்துறை அமைச்சரும் சீனாவின் தீவிர ஆதரவாளருமான டக்ளஸ் தேவானந்தா.












Click it and Unblock the Notifications