மீனவர் படகு மீது கப்பலை விட்டு மோதிய இலங்கை கடற்படை..கடலில் மூழ்கிய தமிழர் சடலமாக மீட்பு.. பரபரப்பு
நாகப்பட்டினம்: தமிழ்நாடு மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையினரின் கப்பல் வேண்டுமென்றே மோதியதில் தமிழ்நாடு மீனவர் ஒருவர் பலியானார்.
இந்திய பெருங்கடலில் மீண்டும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இலங்கை கடற்படையினர் இந்திய பெருங்கடல் பகுதியில் தமிழ்நாடு மீனவர்களிடம் மீண்டும் அத்துமீற தொடங்கி உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பரபரப்பு
கோட்டைபட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து நேற்று 118 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்திய கடல் பகுதியில் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற அவர்கள், அதிகாலையில் இலங்கை கடற்படை மூலம் சுற்றி வளைக்கப்பட்டனர். 19 கடல் மைல் நாட்டிகல் தொலைவில் இவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படை மூலம் சுற்றி வளைக்கப்பட்டனர்.

சுற்றிவளைப்பு
அதோடு ஒரு சில மீனவர்களின் படகுகளில் வேகமாக வந்து கடற்படை படகு மூலம் இலங்கை கடற்படை அதிகாரிகள் மோதி உள்ளனர். இவர்கள் மோதிய படகில் சுரேஷ் குமார், ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய மீனவர்கள் இருந்துள்ளனர். இதில் நான்கு பேரும் கடலில் மூழ்கினார்கள். இதில் சுகந்தன், சேவியர் ஆகிய இரண்டு பேரை இலங்கை கடற்படை மீட்டு கைது செய்து அழைத்து சென்றனர். இன்னொரு மீனவர் சுரேஷ், தமிழ்நாடு மீனவர்கள் மூலம் மீட்கப்பட்டார்.

ராஜ்கிரண்
காணாமல் போன இன்னொரு மீனவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்த நிலையில்தான் இன்று பிற்பகல் அவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மீனவர்களின் பல மணி நேர தேடலுக்கு பின் காணாமல் போன மீனவர் ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டார். கோட்டைபட்டினம் மீனவர்கள் இப்படி இலங்கை கடற்படையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொதிப்பு
கோட்டைப்பட்டினம் மீனவ கிராமத்தில் மக்களிடையே இந்த சம்பவம் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்தால் கூட கைதுதான் செய்ய வேண்டும். மாறாக படகில் மோதி கொலை செய்வது, துப்பாக்கி சூடு நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கோட்டைப்பட்டினம் மீனவ கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த தொடர் அத்துமீறல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications