இங்க சுத்தி..அங்க சுத்தி! நாகை பிரச்சாரத்திற்கு விஜய்க்கு அனுமதி! காவல்துறையின் கடும் கட்டுப்பாடுகள்
நாகை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த வாரம் பிரச்சாரத்தைத் தொடங்கிய நிலையில், வரும் சனிக்கிழமை நாகையில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். கடந்த வாரம் திருச்சியில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் நாகையில் புத்தூர் பகுதியில் பேச விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தன்னார்வலர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது காவல்துறை.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் கடந்த சனிக்கிழமை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியைத் திருச்சியில் தொடங்கினார். எதிர்பார்த்ததை விட திருச்சி மக்கள் விஜய்க்குப் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர்.
விமான நிலையத்திலிருந்து திருச்சியில் பிரச்சாரம் நடைபெற்ற மரக்கடைப் பகுதிக்கு வருவதற்கே கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கு மேலானது. தொடர்ந்து குன்னம், அரியலூரில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய் நேரமின்மை காரணமாகப் பெரம்பலூர் பயணத்தைக் குறைத்துக்கொண்டார்.

விஜய் நாகை பிரச்சாரம்
இதை அடுத்து ஒரு நாளைக்கு மூன்று மாவட்டங்கள் என்ற திட்டத்தை மாற்றி ஒரு நாளைக்கு இரண்டு மாவட்டங்கள் என்ற வகையில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் வருகின்ற 20 ஆம் தேதி சனிக்கிழமை நாகை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். விஜய் வருகையை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர் சுகுமார் தலைமையில் காவல் கண்காணிப்பாளரிடம் ஏழு இடங்களில் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது.
காவல் துறை அனுமதி
திருச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் போல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அனைத்து கட்ட ஆய்வுகளும் மேற்கொண்ட பிறகு அனுமதி வழங்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் சாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏழு இடங்களில் ஒரு இடமான புத்தூர் ரவுண்டானா பகுதியை தேர்வு செய்து காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர்.
பிரச்சாரத்துக்கு நிபந்தனை
இதற்கு பல கட்ட நிபந்தனைக்கு உட்பட்டு காவல்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு நாகூர் வாஞ்சூர் ரவுண்டானாவில் வரவேற்பு அளிக்கப்பட்டு, நாகூர் நகரில் நுழைந்து அமிர்தா வித்யாலயா சாலை வழியாக கிழக்கு கடற்கரை சாலையை கடக்க வேண்டும் எனவும், பின்னர் புத்தூர் ரவுண்டானாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புத்தூர் ரவுண்டானா
பின்னர் சிக்கல், கீழ்வேளூர் வழியாக விஜய் திருவாரூர் மாவட்டத்தை சென்றடைவார். திருச்சி பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களால் இடையூறு ஏற்பட்ட நிலையில் நாகை நகருக்குள் விஜய்க்கு அனுமதி மறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும் கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்தி பிரச்சாரத்தை மேற்கொள்ள காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
தமிழக வெற்றி கழகம்
கூட்டம் அதிகமாக இருந்தால் தன்னார்வலர்களை அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தமிழக வெற்றிக்கழகத்தினர் ஏற்பாடு செய்து கொள்ளவும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் அறிவுறுத்தியுள்ளார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications