வேண்டாம் வேண்டாம்னு சொன்னோமே.. வெடி வீசிய பாஜகவினர்.. 2 வீடுகள் மொத்தமா காலி.. நாகை பெண்கள் கண்ணீர்
நாகப்பட்டினம்: நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.ஜி.எம். ரமேஷை வரவேற்று பாஜக நிர்வாகிகள் வெடித்த பட்டாசு தவறுதலாக வீட்டின் மீது விழுந்து இரண்டு வீடுகள் தீக்கிரையானது. அந்த வீடுகளில் இருந்து 2 டி.விக்கள், 2 பிரிட்ஜ்கள், 2 கட்டில்கள், வாஷிங் மெஷின், 6 பீரோக்கள், 6 மின்விசிறிகள் என மொத்தமாக வீணாய் போனது.
நாகை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம். ரமேஷ் அறிவிக்கப்பட்டார். அவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை நாகூரில் பிரசாரத்தை தொடங்கி நாகை நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் வாக்கு சேகரித்து வந்தார். அதனை தொடர்ந்து நாகை மேட்டுபங்களாவில் பிரசாரம் செய்த அவர்,அங்கு பிரசாரத்தை முடித்து விட்டு புதிய நம்பியார் நகருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வரவேற்பதற்காக நாகப்பட்டினம் நகராட்சி அலுவலகம் அருகே மெயின் ரோட்டில் பாஜகவினர் பட்டாசு வெடித்து வேட்பாளர் ரமேசுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது பட்டாசு வெடித்ததில் அதிலிருந்து தீப்பொறிகள் பறந்து அருகில் உள்ள ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் பக்கிரிசாமி(வயது 61) என்பவரது கூரை வீட்டில் விழுந்தது. அவரது கூரை வீட்டில் தீப்பற்றி எரிந்தது. பின்னர் தீயானது காற்றின் வேகம் காரணமாக மளமளவென எரிய தொடங்கியது. அப்போது வீட்டில் இருந்த பக்கிரிசாமி, அவரது மனைவி பானுமதி, மகள் ஸ்ரீபிரியா, அவரது மகள் ஸ்ரீலேகா, மருமகள் ரேவதி ஆகியோர் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார்கள்.
வீட்டின் மேற்பகுதியில் தீ பிடித்ததால் தண்ணீர் ஊற்றி உடனடியாக அவர்களால் அணைக்க முடியவில்லை. இது குறித்து நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு 2 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனிடையே தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் சுப்ரமணியன் என்பவருக்கு சொந்தமான சீட் வீடு பகுதியாகவும் எரிந்து நாசமானது.
இதனால் அந்த வீடுகளில் இருந்த 2 டி.விக்கள், 2 பிரிட்ஜ்கள், 2 கட்டில்கள், வாஷிங் மெஷின், 6 பீரோக்கள், 6 மின்விசிறிகள், பாத்திரங்கள் மற்றும் புத்தகங்கள் என அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதுபற்றி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீட்டினை சேர்ந்தவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பெண் ஒருவர் கூறுகையில் "எலெக்சனுக்கு ஓட்டு கேட்டு போனவங்க வெடிவெடிச்சு கீத்துல விழுந்திருச்சு.. ஒரு பொருளுமே இல்லை.. எல்லாம் போச்சு.. என்னால் இதற்கு மேல் பேச முடியவில்லை என்றார் (கதறி அழுதார்). அடுத்தாக மூதாட்டி ஒருவர் பேசகையில், " அய்யோ என்னங்க இப்படி வெடி வெடிக்கிறீங்களே.. வீட்டுமேல விழுந்திருபோகுது என்று சொன்னேன்.. ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.. அடுத்த 5 நிமிடத்தில் படபடவென்று வீட்டில் மேல் தீ பற்றியது.. பக்கத்து வீட்டுக்காரர் கத்துகிறார்.. நான் கதவை திறந்து பார்த்தேன்.. எல்லாமே இடிஞ்சு போச்சு.. என்கிட்ட இப்ப ஒன்றுமே இல்லை..வீட்டில் பீரோ, நகை, கட்டில், பணம் என எந்த பொருளுமே இல்லை" என்றார்..












Click it and Unblock the Notifications