ஒவ்வொரு லீவுக்கும்.. இதே நிலைதான்! சென்னைக்கு வர.. ரயில் நிலையங்களில் முண்டியடித்த கூட்டம்!
நாகர்கோவில்: ஒவ்வொரு பண்டிகை விடுமுறையின்போதும், சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு மக்கள் செல்ல சிரமப்படுவதும், அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்ப கஷ்டப்படுவதும் வாடிக்கையான ஒன்றாக மாறியிருக்கிறது. அந்த வகையில், இந்த முறையும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர, மக்கள் ரயில் நிலையங்களில் முண்டியடித்து உள்ளனர்.
குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலை மோதியுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில், முன்பதிவு செய்யப்படாத பயணிகளும் ஏறியுள்ளதால், பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பலன் கொடுக்காத சிறப்பு ரயில்கள்
பொதுவாக இதுபோன்ற பண்டிகை நாட்களில், பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்தும், தாம்பரத்திலிருந்தும், எழும்பூரிலிருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பொங்கல் பண்டிகை ஜன.15ம் தேதி தொடங்கியது. ஆனால், ஜன.14ம் தேதியான போகி பண்டிகைக்கே அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பயணிகள் ஜன.13ம் தேதி இரவும், ஜன.14ம் தேதி இரவும் புறப்பட்டு சென்றனர்.
ரயில்களில் கூட்டம்
இன்னும் சிலர் ஜன.9, 10 மற்றும் 11ம் தேதி இரவு சென்னையிலிருந்து புறப்பட்டனர். இதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இப்படி இருக்கையில், இன்றுடன் விடுமுறை முடிவடைவதால் மக்கள் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி உள்ளது.
பயணிகள் பாதிப்பு
கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டால்தான், அடுத்த நாள் காலை 5-6 மணிக்கு சென்னைக்கு வர முடியும். எனவே பயணிகள் அதிக அளவில் குவிந்திருக்கின்றன. சென்னை திரும்ப சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டாலும், அது போதுமானதாக இல்லாததால், பயணிகள் பாதிப்படைந்துள்ளனர். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில், முன்பதிவு செய்யப்படாத பயணிகள் ஏரியதால், முன்பதிவு செய்த பயணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications