நாகர்கோவிலில் பரபரப்பு.. நடு ரோட்டில் வாலிபரை அடித்து இழுத்து செல்லும் கும்பல்.. வெளியான வீடியோ
Recommended Video

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 5 பேர் கொண்ட கும்பல் ஒரு வாலிபரை அடித்து உதைத்து இழுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவிலில் உள்ள காவல் நிலையங்களில் இது வரை எந்த புகார்களும் வராததால் பிரச்சனைக்கான காரணம் தெரிய வரவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை பாலியல் தொல்லை உட்பட பல்வேறு சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இதனை போன்று மாவட்டத்தில் மதுக்கடை ஊழியர்களை தாக்கி கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
போலீஸ் நிலையங்களில் தேவையாக காவலர்கள் இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நாகர்கோவிலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக சாலையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கினர்.
பின்னர், அந்த வாலிபரை அடித்து உதைத்து அருகில் உள்ள கடைக்குள் கொண்டு சென்றும் அந்த கும்பல் தாக்கியது. அருகில் நின்று பேசி கொண்டிருந்த மாணவர்களின் இரு சக்கர வாகனத்தை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் எட்டி உதைத்து கீழே தள்ளியதுடன் அடித்து உதைத்த வாலிபரை 5 பேர்களில் ஒருவன் சட்டையை பிடித்து இழுத்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி யில் பதிவாகி உள்ளது.
தற்போது, இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது . பட்டப்பகலில் நடு ரோட்டில் அதுவும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்று உள்ள இந்த அடிதடி சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட கோட்டார் காவல் நிலையத்தில் விசாரித்தபோது புகார் ஏதும் வரவில்லை என கூறியுள்ளனர், இதனால் பிரச்சனைக்கான காரணம் தெரியவரவில்லை.












Click it and Unblock the Notifications