ரூ.1,60,000 வரை வட்டி இல்லா கடன்.. கிசான் கிரெடிட் கார்டு வாங்க விவசாயிகளுக்கு அருமையான வாய்ப்பு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் கிசான் கிரெடிட் கார்டு வாங்க விவசாயிகளுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.
கிசான் கிரெடிட் கார்டு திட்டம்: மத்திய அரசால் 1998 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டம் தான் கிசான் கிரெடிட் கார்டு திட்டம். . ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) ஆகியவற்றுடன் இணைந்து கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்கு தேவையான நிவாரணம் வழங்குவதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்டது.

இந்தியாவில் விவசாயிகள் வறட்சி அல்லது பருவமழை பொய்த்த காலங்கள் மற்றும் விளைச்சல் பாதிக்கப்பட்ட காலங்களில், விவசாயிகள் அதிக வட்டி விகிதத்தில் கடன் வழங்குபவர்களிடம் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். அப்படி வாங்கும் கடன்களை திருப்பிச் செலுத்தத் தவறினால் அதிக துயரங்கள் விவசாயிகள் சந்திக்கிறார்கள். இதுபோன்ற பிரச்சனைகளை தடுக்கவே, விவசாயிகளுக்கு மிக குறைவான வட்டி விகிதத்தில் கடன் வழங்க கிசான் கிரெடிட் கார்டு தொடங்கப்பட்டது.
கிசான் கிரெடிட் அட்டை அம்சங்கள்: பொதுவாக கிசான் கிரெடிட் அட்டை ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். ஆனால் கண்டிப்பாக ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். பயிர்களின் அறுவடை மற்றும் விற்பனைக்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். கடன் காலம் 12 மாதங்கள் ஆகும். ஒருவேளை பயிர் விளைச்சல் பாதிப்பு அல்லது ஏதேனும் இடர்பாடு ஏற்பட்டால், கடன் தொகையை செலுத்தும் காலத்தை நான்கு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நீட்டித்துக் கொள்ள முடியும். இந்த பயிர் கடன் என்பது, விவசாயியின் சிபில் ஸ்கோரை பொறுத்து வங்கிகள் தரும்.
கிசான் கிரெடிட் பலன்கள் : விவசாயிகள் கடன் தொகையுடன் விதைகள், உரங்கள், விவசாய உபகரணங்கள் வாங்கலாம். குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். சராசரியாக சுமார் 9% வட்டியில் கடன் கிடைக்கும். அதிகபட்ச கடன் வரம்பு ரூ. 3 லட்சம் வரை கடன்கள் கிடைக்கும்
நல்ல சிபில் ஸ்கோர் இருந்தால் விவசாயிகளுக்கு அதிக கடன் தருவார்கள். அதேபோல் நல்ல சிபில் ஸ்கோர் இருந்தால் வட்டி விகிதம் குறைவாக இருக்கும்
கிசான் கிரெடிட் திட்டம் மூலம் பயிர்களுக்கு காப்பீடும் பெறலாம்.. சில பயிர் கடன் வகைகளுக்கு தேசிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு பெறலாம். இந்த கிசான் கார்டு வைத்திருப்பவர்கள் இயற்கைப் பேரிடர்கள் அல்லது பூச்சித் தாக்குதல்கள் பாதிப்புகளை சந்தித்தால் நிவாரணம் பெற முடியும். 70 வயதுக்குட்பட்ட விவசாயிகளுக்கு விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது.
கிசான் கிரெடிட் பெற விண்ணப்ப நடைமுறைகள்: கிசான் கிரெடிட் கார்டு பல தேசியமயமாக்கப்பட்ட, கூட்டுறவு அல்லது பிராந்திய வங்கிகளில் எளிதாக விண்ணப்பபத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். இந்த கார்டை தரும் முன்பு வங்கி விண்ணப்பதாரரின் கிரெடிட் ஸ்கோரை கண்டிப்பாக சரிபார்க்கும். அதேபோல் விண்ணப்பதாரரின் நிலம், பயிர் முறை, வருமானம் போன்றவற்றையும் வங்கி பரிசோதிக்கும் . அதன்பிறகே வங்கிகள் கிசான் கிரெடிட் கார்டுகளை வழங்கும்.
இந்நிலையில நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் கடன் அட்டை (கிசான் கிரெடிட் கார்டு) விண்ணப்பம் பெறும் முகாம் பாண்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடைபெற உள்ளது.
முகாமில் ரூ.1,60,000 வரை வட்டி இல்லா பயிர் கடனுக்கான பரிந்துரை செய்யப்படும். ஆகவே கேசிசி அட்டை இதுவரை பெறாத விவசாயிகள் ஆதார், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம்-1 ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறும் கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications