ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்: நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி அடியோடு பாதிப்பு! 2 கோடி முட்டைகள் தேக்கம்!
நாமக்கல்: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேஸ் தொடுத்துள்ள போர் மற்றும் ஈரானின் பதிலடி தாக்குதல்கள் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல்லில் உள்ள குடோன்களில் முட்டைகள் சுமார் 2 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் ஏற்றுமதியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் மேற்பட்ட முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

மேலும், நாமக்கல் மண்டலத்தில் இருந்து நாள்தோறும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்படி துபாய், குவைத், கத்தார், ஓமன், பஹ்ரைன் மற்றும் ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு நாமக்கல்லில் இருந்து கப்பல்களில் கண்டெய்னர் மூலம் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த சில தினங்களுக்கு முன் போர் தொடங்கி தீவிரமடைந்துள்ளது. குவைத், துபாய் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன.
இதன் எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு அனுப்புவதற்காக கண்டெய்னர்களில் ஏற்றப்பட்ட முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் ஏற்றுமதியாளர்கள் கவலையைடைந்துள்ளனர்.
துபாய் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதால் அங்குள்ள ஜெபல் அலி துறைமுகத்தில் வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. விமானம் மூலம் முட்டை அனுப்பும் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. 2 ஆயிரம் டாலராக இருந்த கட்டணம் 6 ஆயிரம் டாலர் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாமக்கல்லில் உள்ள குடோன்களில் ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் சுமார் 2 கோடி முட்டைகள் வரை தேங்கியுள்ளன. போர் முடிவுக்கு வந்தால் மட்டுமே ஏற்றுமதி மீளும். போர் நடைபெறுவதால் முட்டை ஏற்றுமதி முற்றிலுமாக தடைபட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இதற்கு முட்டை ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் போர் காரணமாக முட்டை ஏற்றுமதி தடைப்பட்டிருப்பதால் முட்டை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 30 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக குறைந்து உள்ளது. இதனால் கோழி முட்டை பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications