ஆன்மீக அரசு.. 5 ஆண்டுகளுக்குள் 20 ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு.. தயாராகும் தமிழக அரசு
நாமக்கல்: தமிழகத்தில் இதுவரை 1,131 கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளதாகவும், 5 ஆண்டுகளுக்குள் 20 ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் இந்து சமய அறநிலையத்துறைக்குப் புத்துயிர் கொடுக்கப்பட்டு ஏராளமான பணிகளை அது செய்து வருகிறது. இந்துக்களுக்கு எதிரான அரசு என்ற விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும் சனாதனம் பற்றிய சர்ச்சைகள் பரவினாலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆலயங்களில் பல்வேறு பணிகள் சத்தமில்லாமல் நடைபெற்று வருகின்றன.

திமுக இந்து மதத்திற்கு எதிரிகள் இல்லை, திரிகள் என்றும் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் காலம் பொற்காலமாக இருக்கும் என்று கூறியுள்ளார் அந்த துறையின் அமைச்சர் பி.கே. சேகர்பாபு. தன்னை தேடி வருபவர்களுக்கு வரம் தரும் மூலவராகவும் வர இயலாதவர்களுக்கும் வீடு தேடிச்சென்று வரம் தரும் உற்சவராகவும் முதலமைச்சர் ஸ்டாலின் திகழ்வதாக அமைச்சர் சேகர்பாபு முன்பே பாராட்டியிருந்தார்.
இது ஆன்மீக அரசு என்று அமைச்சர் சேகர்பாபு சொன்னது போலவே, மகாசிவராத்திரி திருவிழா, நவராத்திரி கொலு கொண்டாட்டம், ஆடி மாதம் அம்மன் கோவில் சுற்றுலா, புரட்டாசி மாதம் பெருமாள் கோவில்கள் சுற்றுலா, கந்த சஷ்டி முருகன் கோவில் சுற்றுலா என பல சிறப்பான திட்டங்களை அறிவித்து மக்களின் குட்புக்கில் இடம்பிடித்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பி.கே.சேகர் பாபு. ஆன்மீகவாதிகள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
திருக்கோவில் அறப் பணிகள், திருக்கோவிலுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்பு, கும்பாபிஷேகங்கள் என அனைத்தையும் சிறப்பாக நடத்தி வருகிறார் பி.கே.சேகர்பாபு. இதுவரைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலயங்கள் புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நரசிம்ம சுவாமி கோவிலில் நேற்றைய தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் இதுவரை 1,131 கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளதாகவும், 5 ஆண்டுகளுக்குள் 20 ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.5,436 கோடி மதிப்புள்ள 5,680 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறிய சேகர்பாபு, திருநீர்மலை கோவில், திருக்கழுக்குன்றம் கோவில், அனுவாவி முருகன் திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ரோப் கார் சேவை அமைக்கும் பணி வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications