இந்து முன்னணி மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு.. மனைவி கொலை.. நாமக்கல்லை அதிர வைத்த சம்பவம்!
நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே இந்து முன்னணி மாவட்ட செயலாளரை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிவிட்டு, அவரது மனைவியை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பொத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (40). இவர் இந்து முன்னணி அமைப்பின் நாமக்கல் மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது மனைவி கீதா (37). நேற்று இரவு சுமார் 11.50 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் ஜெகதீசனை அரிவாளால் வெட்டி விட்டு, மனைவி கீதாவை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

ஜெகதீசன் குடும்பத்தினர் வழக்கம்போல நேற்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த நிலையில் கையில் அரிவாளுடன் மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து வெட்டியதில் கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதில் ஜெகதீசன் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுப்பட்டு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக பரமத்தி வேலூர் போலீசார் அங்கு விரைந்தனர். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. ராஜேஷ்கண்ணன் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நள்ளிரவே விரைந்து வந்தார். பலத்த காயமடைந்த ஜெகதீசன் மீட்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொத்தனூரில் உள்ள இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெகதீசன் வீட்டை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications