300 அடி பள்ளம்.. குழந்தைகளை வீசிய "கொடூர" தந்தை.. இரட்டை ஆயுள் தண்டனை.. நீதிமன்றம் பரபர தீர்ப்பு
நாமக்கல்: குடும்பத் தகராறு காரணமாக தனது இரண்டு குழந்தைகளை 300 அடி பள்ளத்தில் வீசியெறிந்த கொடூர தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சுமார் 3 ஆண்டுகள் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
சாதாரண குடும்பத் தகராறு கைமீறி சென்றால் அது எந்த அளவு பாதிப்பை உருவாக்கும் என்பதற்கு இந்தச் சம்பவமே சிறந்த உதாரணம் ஆகும்.

குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட தகராறு
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள குண்டூர்நாடு அரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி (29). கூலித்தொழிலாளியான இவருக்கு பாக்கியம் என்ற மனைவியும் கிரிதாஸ் (8), கவிதர்ஷிணி (6) ஆகிய இரண்டு பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் அங்குள்ள பள்ளியில் முறையே மூன்றாம் மற்றும் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தனர். இதனிடையே, சிரஞ்சீவிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவருக்கும், மனைவி பாக்கியத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கணவனை பிரிந்து சென்ற மனைவி
இந்த சூழலில், கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாக்கியம் கொல்லிமலை கவரப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். சிரஞ்சீவி பல முறை அழைத்த போதிலும் பாக்கியம் அவருடன் செல்ல மறுத்துவிட்டார். இதன் தொடர்ச்சியாக, குழந்தைகளும் அங்குள்ள பள்ளியில் சேர்ந்து படித்தனர்.

குழந்தைகளை அழைத்து சென்ற சிரஞ்சீவி
இந்நிலையில், சில மாதங்கள் கழித்து நவம்பர் 7-ம் தேதி கவரப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டுக்குச் சென்ற சிரஞ்சீவி, மனைவி பாக்கியத்திடம் சமாதானம் பேசியுள்ளார். ஆனால், அவரது பேச்சை பாக்கியம் கேட்கவில்லை. இதையடுத்து, குழந்தைகளை பிரிந்து தன்னால் இருக்க முடியவில்லை என்றும், குழந்தைகளையாவது தன்னிடம் அனுப்புமாறும் சிரஞ்சீவி கெஞ்சி கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் கிரிதாஸ், கவிதர்ஷிணியை கணவருடன் பாக்கியம் அனுப்பி வைத்தார்.

போலீஸில் புகார்
இந்நிலையில், குழந்தைகளை அனுப்பி வைத்து இரண்டு தினங்களாகியும் சிரஞ்சீவியிடம் இருந்து எந்த செல்போன் அழைப்புகளும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பாக்கியம், பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது அங்கும் குழந்தைகள் வரவில்லை எனக் கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கொல்லிமலை வாழவந்திநாடு காவல் நிலையத்தில் இதுதொடர்பாக பாக்கியம் புகார் அளித்தார். இதன்பேரில், சிரஞ்சீவியை அழைத்து போலீஸார் விசாரித்த போது, குழந்தைகளை வீட்டில் வைத்துவிட்டு வெளியே போனதாகவும், திரும்பி வந்து பார்க்கும் போது அவர்களை காணவில்லை எனவும் கூறியுள்ளார்.

300 அடி பள்ளத்தில்..
ஆனால், சிரஞ்சீவியின் பேச்சில் சந்தேகமடைந்த போலீஸார், அவரிடம் தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தைகளை சீக்குப்பாறை அருகே உள்ள 300 அடி பள்ளத்தாக்கில் வீசியதாக அவர் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, கொல்லிமலை தீயணைப்புப் படையினர் அந்தப் பள்ளத்தாக்கில் இருந்து இரண்டு குழந்தைகளின் உடலையும் மீட்டனர்.

தீர்ப்பு
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக சிரஞ்சீவியை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு, நாக்கல் மாவட்ட மளிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நேற்று வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, தனகு குழந்தைகளை கொலை செய்த குற்றத்திற்காக சிரஞ்சீவிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications