நள்ளிரவில் வீடு புகுந்த 4பேர்.. திமுக முன்னாள் எம்பியின் பேரன் வெட்டிக்கொலை.. பின்னணியில் மருமகன்
நாமக்கல்: நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், திமுக முன்னாள் எம்பி ஜி.பி.எஸ். சோமசுந்தரத்தின் பேரனை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. இச்சம்பவம் தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த அவரது மருமகன் மற்றும் 4 பேர் கொண்ட கூலிப்படை கும்பலை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சியை சேர்ந்தவர் ஜி.பி.எஸ். சோமசுந்தரம். திமுக பிரமுகரான இவர் 2 முறை எம்பியாக இருந்துள்ளார்.
இவரது பேரன் ராஜேந்திரன் (52), விவசாயி ஆவார். பேளுக்குறிச்சியில் வசித்து வந்தார். இவரது மனைவி சுகுணா (45) . இவர்களுக்கு சுபி என்ற மகளும், சுரேஷ் என்ற மகனும் உள்ளனர்.

காதல் திருமணம்
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, சுபி காதல் திருமணம் செய்து கொண்டதுடன் சேலம் மாவட்டம் ஆத்தூரில் வசித்து வருகிறார். சுரேஷ் ஆந்திராவில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இதனிடையே பேளுக்குறிச்சியில் உள்ள வீட்டில், மனைவியுடன் ராஜேந்திரன் தனியாக வசித்து வந்தார். இவருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருக்கிறது.

கொலை
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், ராஜேந்திரனின் வீட்டுக்கு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்து, கதவை தட்டி இருக்கிறது. சத்தம் கேட்டு எழுந்து வந்த ராஜேந்திரன், கதவை திறந்த போது, 4 பேரும் அவரை கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளார்கள். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக அந்த கும்பல் தப்பியோடி விட்டது. கணவன் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை பார்த்து சுகுணா செய்வதறியாது திகைத்தார். பின்னர், கூச்சலிட்டுள்ளார்.

மோப்ப நாய்
இதை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் வந்து, பேளுக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு எஸ்பி சரோஜ்குமார் தாகூர் மற்றும் போலீசார் வந்து விசாரித்தார்கள். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள் வீட்டில் இருந்த ரேகைகளை பதிவு செய்தார்கள். பின்னர், ராஜேந்திரனின் உடலை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

4 பேர் கைது
சேந்தமங்கலம் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சொத்துக்காக இந்த கொலை நடந்தது உறுதியாகி உள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த ராஜேந்திரனின் மருமகன் நவீன்(30) மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் கும்பலை, நேற்று போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக முன்னாள் எம்பி பேரன் படுகொலை செய்யப்பட்டது நாமக்கல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications