நாமக்கல் பட்டாசு விபத்து.. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்!
நாமக்கல் : நாமக்கல் அருகே மோகனூரில் வீட்டில் பட்டாசுகள் வெடித்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல்லில் பட்டாசு விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மோகனூரில் தில்லை குமார் என்பவர் தனது வீட்டில் மொத்தமாக வாங்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 4 பேர் பலியாகினர். இந்தக் கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், இச்சம்பவத்தை கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாகவும், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

வீட்டில் வெடி விபத்து
நாமக்கல் அருகே உள்ள மோகனூரில் தில்லைகுமார் என்பவர் பட்டாசுகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்தார். இவர் தன்னுடைய வீட்டில் நாட்டு வெடிகளையும் பட்டாசுகளையும் தனது கிடங்கில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று அதிகாலையில் பட்டாசுகள் திடீரென வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில், அடுத்தடுத்து 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வேகமாக தீ பரவியது.

4 பேர் பலி
இந்த விபத்தில் தில்லைகுமார், அவரது மனைவி, தாயார் ஆகியோரும், அண்டை வீட்டில் வசிக்கும் மூதாட்டியும் உயிரிழந்தனர். தில்லைகுமாரின் 5 வயது மகள் உயிர்தப்பினார். தீ விபத்தால் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த பொருட்கள் சேதமடைந்த நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் மஞ்சுளா தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் மாதிரிகளை சேகரித்து தடயவியல் நிபுணர்களும் சோதனை மேற்கொண்டனர்.

அமைச்சர் ஆய்வு
வெடிவிபத்து நடைபெற்ற இடத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.ராஜேஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மதிவேந்தன், காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகே விபத்து குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகும் எனத் தெரிவித்தார். இதையடுத்து, பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் உத்தரவு
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம், மோகனூர் பகுதியில் இன்று அதிகாலையில் அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறிய விபத்தில் தில்லைக்குமார் (வயது 35), பிரியா (28), செல்வி (55) மற்றும் பெரியக்காள் (73) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இவ்விபத்தில் காயமுற்றவர்களுக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

நிவாரண உதவி
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் இரண்டு லட்சமும் மற்றும் காயமுற்றவர்களுக்கு தலா ரூபாய் ஐம்பதாயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications