நாமக்கல் விடுதி மாணவர்கள் விவகாரம்! உணவு ஒவ்வாமை குறித்து தவறான தகவல் பரப்பியவர் மீது பாய்ந்த ஆக்ஷன்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் மாணவர்கள் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தவறான தகவல் பரப்பியவர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான தனியார் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் பயின்ற மாணவர்கள் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டனர்.

அதாவது குமாரபாளையத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியின் விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவர்கள் சிலர் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொண்டனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தற்போது குணமடைந்து விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பியிருக்கின்றனர். ஆனாால் இந்த சம்பவத்தை சிலர் தவறாக பரப்பியுள்ளனர். அதாவது, மாணவர்கள் சிலர் உயிரிழந்துவிட்டதாகவும், அது மறைக்கப்பட்டுவிட்டதாகவும் சோஷியல் மீடியாக்களில் வதந்தியை பரப்பியிருந்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்திருந்த குமாரபாளையம் போலீசார், விசாரணை மேற்கொண்டிருந்திருந்தனர். விசாரணையில், திருச்சி மாநகரம், தென்னூரைச் சேர்ந்த கார்த்திக்குமார் (வயது 28) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட காவல் துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டம், குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்ஸல் குழும கல்வி நிறுவனங்களில் மாணவ மாணவிகள் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் 27.10.2025 (திங்கட்கிழமை) காலை சில மாணவர்கள் வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவர்களில் சில மாணவர்கள் எக்செல் கல்லூரி மருத்துவ மையம் மற்றும் குமாரபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் புறநோயாளிகளாக (OP) சிகிச்சை பெற்று உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கல்லூரி விடுமுறையை தொடர்ந்து தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றுவிட்டனர்.
மாணவர்கள் அனைவரும் உடல்நலத்துடன் உள்ள நிலையில் மாணவர்கள் சிலர் இறந்துவிட்டதாக சமூக விரோதிகள் சிலர் சமூகத்தில் பதற்றத்தையும் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதலங்களில் தவறான தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில், குமாரபாளையம் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இவ்வாறு தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்பிய திருச்சி மாநகரம், தென்னூரைச் சேர்ந்த கார்த்திக்குமார் (வயது 28) என்பவர் நேற்று (01.11.2025) கைது செய்யப்பட்டடு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
மேலும் இதுபோன்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பதிவேற்றம் செய்வோர் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications