ஒரே ஒரு ’டீ’ யால் நாமக்கல் போலீசாருக்கு வந்த தலைவலி.. 100-க்கு கால் செய்து லாரி டிரைவர் செய்த செயல்
நாமக்கல்: ஒரே ஒரு டீ கேட்டதற்கு, காசு கொடுத்தால் தான் கொடுக்க முடியும் என்று கடைக்காரர் சொல்லிவிட்டதால், அந்த கடைக்காரரை பழி வாங்க நினைத்து லாரி டிரைவர் செய்த செயல் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
பொதுமக்கள் அவசர தேவைக்கு காவல் துறையின் உதவியை பெற 100 என்ற அவசர அழைப்பு உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை சம்பவங்கள், திருட்டு, அடிதடி என சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்பட்டால் உடனடியாக போலீசாரை அழைக்க வேண்டும் என்றால் இந்த எண்ணிற்கு கால் செய்தால் போதும். அடுத்த சில நொடிகளில், சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து போலீசார் விசாரணைக்கு வந்து விடுவார்கள்.

100-க்கு கால் செய்து லாரி டிரைவர்
பொதுமக்களின் பாதுகாப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த 100 அவசர அழைப்பு எண் உள்ளது. ஆனால், ஒரு சில நேரங்களில் போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கு போலி அழைப்புகளும் வந்து பாடாய் படுத்தி விடுகிறது. சில மதுபிரியர்கள் போதையில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு போலியான தகவலை அளிப்பது போன்றவற்றால் போலீசாரின் உழைப்பும், நேர விரயமுமே ஏற்படுகிறது.
அப்படியான ஒரு சம்பவம் தான் நாமக்கல்லில் நடைபெற்றுள்ளது. ஓசியில் டீ கொடுக்காததால் டீக்கடையில் போதைப்பொருள் விற்கப்படுவதாக 100-க்கு கால் செய்து லாரி டிரைவர் ஒருவர் அழிச்சாட்டியம் செய்துள்ளார். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
டீக்கடையில் போலீசார் சோதனை
நாமக்கல் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கடந்த 7 ஆம் தேதி 100-க்கு கால் ஒன்று வந்தது. அழைப்பை போலீசார் எடுத்ததும், எதிர்முனையில் பேசிய நபர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே மார்க்கெட் சாலையில் ராஜாராம் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த டீக்கடையில் போதைப்பொருளை ரகசியமாக வைத்து விற்கிறார் என்று கூறிவிட்டு போனை வைத்தார்.
இதையடுத்து சூப்பிரண்ட் அலுவலகத்தில் இருந்து இந்த தகவல், சேந்தமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றது. உடனடியாக குறிப்பிட்ட அந்த டீக்கடைக்கு சென்ற சேந்தமங்கலம் போலீசார், டீக்கடையில் தீவிர சோதனை நடத்தினர். சல்லடை போடாத குறையாக டீக்கடை முழுவதும் தீவிர சோதனை நடத்தியும் போதைப்பொருள் எதுவும் சிக்கவில்லை. இதனால், போலீசாருக்கு போன் செய்து தகவல் கொடுத்த நபர் மீது சந்தேகம் திரும்பியது.
காசு கொடுத்தால் மட்டுமே டீ கிடைக்கும்
இதையடுத்து போன் செய்து தகவல் கொடுத்த எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, உண்மை தெரியவந்தது. அதாவது, அந்த டீக்கடைக்கு நேற்று முன்தினம் சேந்தமங்கலம் காந்திபுரம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் குமார் (வயது 36) என்பவர் டீ குடிக்க சென்றுள்ளார். அவர் கையில் காசு இல்லாததால் கடனுக்கு டீ கேட்டு இருக்கிறார். ஆனால், டீக்கடை உரிமையாளர் ராஜாராம், கடனுக்கு எல்லாம் டீ கிடையாது.. காசு கொடுத்தால் மட்டுமே டீ கிடைக்கும் என்று விரட்டி விட்டு இருக்கிறார்.
இதனால், கோபம் அடைந்த குமார், பின்னர் கடைக்காரர் ராஜாராம் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார். அவரை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று நினைத்த குமாருக்கு அப்போதுதான் விபரீத ஐடியா ஒன்று தோன்றியிருக்கிறது. அதாவது, போலீசாரிடம் போதைப்பொருள் விற்கிறார் என போட்டு கொடுத்துவிடலாம் எனக் கருதிய குமார், அவசர தொலைபேசி எண் 100-ஐ அழைத்து அந்த டீக்கடையில், போதைப்பொருட்களை ரகசியமாக விற்று வருவதாக புகார் தெரிவித்து இருக்கிறார்.
போலீசார் அறிவுரை
கடனுக்கு டீ கொடுக்காததால் பொய்யான புகாரை லாரி டிரைவர் கொடுத்ததாக டீக்கடைக்காரர் போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, இந்த தகவலை போலீசார் தங்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறார்களாம்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், 'அவசர தொலைபேசி எண்ணான 100-ன் முக்கியத்துவம் அறியமால் இப்படி, பழிவாங்குவதற்காக கால் செய்தால் எமெர்ஜென்சி அழைப்பு விடுத்தால் கூட போலீசார் மெத்தனம் காட்டும் சூழல் உருவாகும். எனவே அவசர தேவைக்கு மட்டுமே 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.












Click it and Unblock the Notifications