பள்ளி சமையலறையில் மனித மலம் வீச்சு.. இளைஞரை கைது செய்த நாமக்கல் போலீஸ்.. வாக்குமூலத்தை கேட்டால் ஷாக்
நாமக்கல்: கடந்த 2ம் தேதி எருமப்பட்டி பேரூராட்சியில் உள்ள துவக்கப் பள்ளி சமையல் கூட கதவில் மனித கழிவைப் பூசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த துரைமுருகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ஆட்சித் தலைவர் உமாவுக்கு இணைய வழியாகச் சமீபத்தில் புகார் கடிதம் ஒன்று வந்தது. அதில் நாமக்கல் எருமப்பட்டி பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சமூக விரோதிகள் அத்துமீறி மிக மோசமான செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்பட்டு இருந்தது.

மனித மலம்: அதாவது அங்குத் துவக்கப் பள்ளியில் உள்ள காலை உணவுத் திட்டச் சமையலறையிலும் மற்றும் ஆசிரியர்கள் அறை முன்பும் சில சமூக விரோதிகள் தொடர்ந்து பல விதமான அருவருப்பான கெட்ட வார்த்தைகளை எழுதிவிடுவதாகக் கூறப்பட்டு இருந்தது. மேலும், பாலியல் உணர்வைத் தூண்டும் வகையிலான படங்களை வரைவதாகவும் கூறப்பட்டு இருந்தது.
இதை எல்லாம் விடக் காலை உணவுத் திட்டச் சமையலறை கதவுகளிலும் மனித மலத்தை அப்பி விட்டு பூட்டை திறக்கவே முடியாத அளவுக்கு மனித மலங்களைப் பூசிவிடுவதாகவும் கூறப்பட்ட இருந்தது. இந்தச் சம்பவம் பல நாட்களாக அங்கே தொடர்கதையாக இருக்கும் போதிலும், இதைத் தடுக்க பள்ளி ஆசிரியர்கள் எந்த விதத்திலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
உத்தரவு: இதனால் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெறும் இந்த சட்ட விரோதமான செயல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது. இந்த செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
கைது: இந்த விகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதற்கிடையே நாமக்கல் எருமப்பட்டி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தயாரிக்கும் அங்கன்வாடியில் மனிதக்கழிவு வீசப்பட்ட விவகாரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதான துரைமுருகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஷாக் வாக்குமூலம்: மது அருந்திவிட்டு ஆபாச வார்த்தைகள் மற்றும் படங்களைப் பள்ளி சுவரில் எழுதியதாகவும் மனிதக்கழிவை வீசியதாகவும் துரைமுருகன் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. போலீசார் துரைமுருகனைக் கைது செய்து விசாரித்ததில் அவர் எதற்காக இதுபோல செய்தார் என்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது சத்துணவு மைய சமையலர், உதவியாளருடன் துரைமுருகனுக்கு முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாகவே சத்துணவு மைய கதவில் மனித கழிவைப் பூசியதாக துரைமுருகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications