"இரு விரல் பரிசோதனை.." சிதம்பரம் தீட்சிதர் குழந்தைகளுக்கு நடத்தப்பட்டது உண்மை! NCPCR உறுப்பினர் பரபர
நாமக்கல்: சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் குடும்ப சிறுமிகளிடம் இரு விரல் பரிசோதனை நடத்தப்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில், குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் இது குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
நாமக்கல் ராசிபுரம் அடுத்துள்ள மல்லூரில் உள்ள தீம் பார்க்கில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் கடந்த 11ஆம் தேதி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து தேசிய குழந்தை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

அதன்படி, தேசிய குழந்தை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் நேற்று (மே 25) அந்த தனியார் தீம் பார்க்கிற்கு நேரடியாக சென்ழு விசாரணை நடத்தினார். அங்குள்ள ஊழியர்களிடம் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினார்.
சோதனை:
சிறுவன் உயிரிழந்த தீம் பார்க்கில் பராமரிப்பு இல்லாமல் சில பகுதிகள் இருந்த நிலையில், அதை அதனை 7 நாட்களுக்குள் சுத்தம் செய்யவும் அவர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து உயிரிழந்த சேலம் சிறுவன் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேசிய குழந்தை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் சிதம்பரம் குழந்தை திருமணங்கள் குற்றச்சாட்டுகள் குறித்தும் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தார்.
முன்னதாக, சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் குடும்ப சிறுமிகளிடம் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை நடந்ததாக ஆளுநர் ரவி குற்றஞ்சாட்டியிருந்தனர்.. மேலும், தீட்சிதர்களைப் பழிவாங்கும் நோக்கத்துடன் சமூக நலத்துறையினர் அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய அவர், குழந்தை திருமணம் நடைபெறவில்லை என்றும் பள்ளி மாணவிகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று இருவிரல் பரிசோதனை நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இரு விரல் பரிசோதனை:
இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேசிய குழந்தை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் சிதம்பரம், அப்போது அவர் கூறுகையில், "சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனையைச் செய்துள்ளனர். இதனை அவர்கள் மருத்துவ அறிக்கையிலேயே தெரிவித்துள்ளனர். சிறுமியின் கன்னித்திரை சேதமடையவில்லை என்று போலீசார் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இருவிரல் பரிசோதனையை நடத்தியுள்ளனர். இதற்கான ஆதாரமும் தேசிய குழந்தை பாதுகாப்பு ஆணையத்திடம் உள்ளது. முன்னதாக நான் ஆளுநர் குற்றச்சாட்டிற்கு எதிராகக் கருத்துகளைக் கூறியதாகத் தகவல்கள் பரவின. ஆனால், நான் அப்படி எதுவும் கூறவில்லை. ஆளுநர் கூறியது உண்மை தான். சிறுமிகளுக்குத் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனையைக் கட்டாயப்படுத்தி நடத்தியுள்ளனர்..
கட்டாயப்படுத்தி வாக்குமூலம்:
குழந்தைத் திருமணம் நடந்ததாகச் சிறுமி அவர்களின் பெற்றோரைக் கட்டாயப்படுத்தி வாக்குமூலத்தை வாங்கியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது தமிழ்நாட்டில் குழந்தை திருமணங்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
அதாவது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி குற்றச்சாட்டுச் சரி என்றே ஆனந்த் சிதம்பரம் கூறியுள்ளார்.
முன்னதாக, நேற்று முன்தினம் இது குறித்து இதே தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் கூறுகையில், "குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர். மேலும், பிறப்புறுப்புகளைத் தொட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இது குழந்தைகள் தொடர்புடைய விவகாரம் என்பதால் ரகசியமான முறையில் விசாரிக்கப்பட்டு வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications