கட்டு கட்டாக ரூ 2.83 கோடி பணம்.. நாமக்கல் பரமத்தி வேலூரில் சிக்கிய கார்.. பரபரப்பு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் கணக்கில் வராத ரூ 2.83 கோடி பணம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் அடுத்த வாரம் அதாவது ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டன.

இதனால் யாரும் எந்த வித ஆவணங்களும் இன்றி ரூ 50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்லக் கூடாது என்பது தேர்தல் நடத்தையில் ஒன்றாகும். இது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்ப்பதற்காக கொண்டு வந்த விதியாகும்.
ரூ 50 ஆயிரத்திற்குள் பணம் கொண்டு செல்லலாம். அதற்கு மேல் கொண்டு போய் ஆவணங்கள் இல்லாவிட்டால் அது தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும். ஒரு வேளை ரூ 10 லட்சத்திற்கு மேல் யாராவது பணம் கொண்டு சென்றால் அந்த வழக்கை வருமான வரித் துறை விசாரிக்கும்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியான பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே உள்ள சோதனை சாவடியில் நேற்று இரவு முதல் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கரூரில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்திய தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
அந்த காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ 2.83 கோடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து காரில் வந்தவர்களிடம் விசாரித்த போது ஏடிஎம் மையத்தில் வைப்பதற்காக பணத்தை எடுத்து வந்ததாக காரில் இருந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் ஏதும் அவர்களிடம் இல்லை.
இதையடுத்து அந்த ரூ 2.83 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்து பரமத்தி வேலூர் துணை தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். இந்த தேர்தல் பணிக்காக தமிழகத்தில் மொத்தம் 900 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications