நாமக்கல் கிட்னி திருட்டு.. இரவோடு இரவாக புரோக்கர்கள் இருவர் கைது! பரபரக்கும் விசாரணை
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு விவகாரம் பூதாகரமாக வெடித்திருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே வறுமையில் உள்ளவர்களைக் குறிவைத்து கிட்னி திருட்டில் ஈடுபட்டதாகச் சொல்லி, புரோக்கர்களாக செயல்பட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் விசைத்தறி தொழிலாளர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலான விசைத்தறி தொழிலாளர்கள் ஏழ்மை நிலையிலேயே இருந்து வருகிறார்கள். இதற்கிடையே திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குராமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அவர்களைக் குறிவைத்து சிறுநீரகம் திருட்டு நடந்ததாகப் பரபர புகார்கள் எழுந்தன.

அதாவது ஏழ்மை நிலையில் இருப்பவர்களைக் குறிவைத்து, அவர்களிடம் சிறுநீரகத்தைப் பெற்று முறைகேடாக விற்பனை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக மருத்துவத் திட்டப் பணிகள் இயக்குநர் வினித் தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது.
இக்குழு நடத்திய விசாரணையில் போலியான சான்றிதழ் வழங்கி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது அம்பலமானது. மேலும், போலியான சான்றிதழ்களைக் கொடுத்து அரசுக் குழுவை ஏமாற்றியதும் அம்பலமானது. இது தொடர்பாக ஏற்கனவே இரு தனியார் மருத்துவமனைகளுக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக மதுரை ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் தென்மண்டலக் காவல்துறைத் தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு வரும் செப்டம்பர் 24ம் தேதிக்குள் விசாரணையை முடித்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக இருவரைச் சிறப்புப் புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இருவரும் ஸ்டான்லி மோகன் மற்றும் ஆனந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் இடைத்தரகர்களாகச் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் அப்பகுதியில் உள்ள ஏழை மக்களை ஏமாற்றி கிட்னி திருட்டிற்கு உதவியதாகக் கூறப்படுகிறது.. அவர்களைக் கைது செய்த சிறப்புப் புலனாய்வு குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்தப் பகுதிகளில் வாசிக்கும் ஏழ்மை நிலையில் இருக்கும் இருக்கும் விசைத்தறி ஊழியர்களைக் குறிவைத்து, அவர்களிடம் இருவரும் மூளைச்சலவை செய்துள்ளனர். பெருந்தொகை கொடுப்பதாகச் சொல்லி உறுதியளித்து கிட்னி கொடுக்க சம்மதிக்க வைத்துள்ளனர். சிறுநீரகம் பெறுவோரும் இவர்களும் நெருங்கிய உறவினர்கள் என்பது போலக் காட்டப் போலியான சான்றிதழ்களையும் இவர்கள் தயாரித்துள்ளனர். கிட்னி ஆபரேஷன் முடிந்த பிறகு சொன்ன தொகையை விட மிகக் குறைவான தொகையைக் கொடுத்தும் ஏமாற்றியதாகச் சொல்லப்படுகிறது.
சிறப்புப் புலனாய்வுக் குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications