ஷாக்! தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை
நாமக்கல்: கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி, அவர்களிடம் இருந்து பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பிரகாஷ், பிரதீப், பிரவீன், திருமுருகன் ஆகியோர் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் 4 பேரும் கோடியக்கரை அருகே 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது 2 அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர், தமிழக மீனவர்களின் படகை சுற்றி வளைத்துள்ளனர்.

இதனால், தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக மீனவர்களின் படகுகளில் ஏறிய இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாக சொல்லப்படுகிறது. மேலும் மீனவர்களை இரும்பு ராடை வைத்து தாக்க தொடங்கியதோடு, படகில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பு மிக்க வலை மற்றும் 50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், ஜிபிஎஸ் கருவி ஆகியற்றையும் கொள்ளையடித்து சென்றனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பினர். கரைக்கு வந்த மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மீனவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாகை மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கிய சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு படகில் அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை தாக்கி, படகில் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, பேட்டரி, செல்ஃபோன், 20 லிட்டர் டீசல் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
மீனவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி கருவிகளையும், மீன்களையும் கொள்ளையடித்தனர். இந்தத் தாக்குதலில் 11 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.












Click it and Unblock the Notifications