அமெரிக்காவில் முதல் அடி வைக்கும் ஸ்டாலின்.. நாளை முதலீட்டாளர் மாநாடு! கையெழுத்தாகும் முக்கிய டீல்!
நியூயார்க்: முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு 10 மணியளவில் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இன்று முதல் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அவர் சான் பிரான்சிஸ்கோவில் தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார்.
தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவில் அரசு முறைப் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்க உள்ளார். அப்போது முதல்வரின் தலைமையில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இன்று அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் அங்கே செப்டம்பர் 2-ம் தேதி வரை தங்கியிருப்பார். அதன்பிறகு சிகாகோ செல்லும் அவர் செப்டம்பர் 11 வரை அங்கே தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார். மு.க.ஸ்டாலின் மீண்டும் செப்டம்பர் 12-ம் தேதி சென்னை திரும்புகிறார். செப்டம்பர் 7 ஆம் தேதி சிகாகோவில் 'வணக்கம் அமெரிக்கா' என்கிற மாநாட்டுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் பல்வேறு தொழிலதிபர்கள், சர்வதேச தமிழ் பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
இதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு காரில் கிளம்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினை வழியெங்கிலும் திமுக தொண்டர்கள் திரண்டு நின்று வழியனுப்பி வைத்தனர். முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் சிறக்க அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் எனப் பலரும் சென்னை விமான நிலையத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.
அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "அரசுப் பயணமாக அமெரிக்கா செல்கிறேன். தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்த்துவிட்டு, வருகிற செப்டம்பர் 14 ஆம் தேதி திரும்பி வரும் வகையில் எனது பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க இது போன்ற பயணங்களை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஏற்கனவே, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டதன் மூலமாகத் தமிழ்நாட்டிற்கு பல்வேறு முதலீடுகள் வந்திருக்கிறது. இந்தப் பயணங்கள் மூலமாக 18,521 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 10,882 கோடி ரூபாய் மதிப்பிலான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
இந்த அமெரிக்க பயணத்தின் போது அமெரிக்க வாழ் தமிழர்களைச் சந்திக்க இருக்கிறேன். எல்லோருடைய வாழ்த்துகளோடும் இந்தப் பயணம் நிச்சயமாக வெற்றிகரமானதாக அமையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.
அமெரிக்கா பயணம் முடிந்தவுடன் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "மாற்றம் ஒன்றே மாறாதது.. Wait and see" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
முதலைமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்டு செல்வதற்கு முன்னதாக திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில். "கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில் தான் இருக்கும். அமெரிக்காவில் இருந்தாலும் தாய்வீடான தமிழ்நாடு பற்றியேதான் என் மனது சிந்திக்கும். கட்சியினரின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு விசாரிப்பேன். ஒரு டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை அடைய உங்களில் ஒருவனாக பயணிக்கிறேன். பயணத்தின் நோக்கம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி பல தலைமுறைகளுக்கு பயன் தர வேண்டும் என்பதே. விமர்சனம் விவாதம் செய்வோருக்கு நாம் நிறைவேற்றும் பயனுள்ள செயல்களே பதில்களாக அமையட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இன்று சான் பிரான்சிஸ்கோ செல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலின், நாளை அங்கு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில், தொழில் தொடங்க தமிழகம் வருமாறு முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுப்பதுடன், முக்கிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது.
வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி புலம்பெயர் தமிழர்களுடன் சந்திப்பை மேற்கொள்ள உள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ புறப்படுகிறார். இங்கு செப்டம்பர் 12ஆம் தேதி வரை தங்கும் முதல்வர், 'ஃபார்ச்சூன் 500' பட்டியலில் உள்ள நிறுவன அதிகாரிகள், கூகுள் CEO சுந்தர் பிச்சை ஆகியோரை சந்தித்து உரையாடுகிறார். சிகாகோவில் அயலகத் தமிழர்களை சந்திக்கிறார்.












Click it and Unblock the Notifications