ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக வலம் வந்த ‘ஃபோ’ மரணம்.. சோகத்தில் ஒபாமா குடும்பம்!
நியூயார்க்: ஒருகாலத்தில் வெள்ளை மாளிகையின் நட்சத்திரமாக ஜொலித்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் செல்ல நாய் ஃபோ புற்றுநோயால் பரிதாபமாக உயிரிழந்தது.
கடந்த 2009ம் ஆண்டு பராக் ஒபாமா அதிமெரிக்காவின் அதிபராக இருந்த போது, ஆறு மாத குட்டியாக அவரது குடும்பத்தாரிடம் வந்து சேர்ந்தது ஃபோ. தற்போது அதற்கு 12 வயது ஆகிறது. போர்த்திகீசிய ரக நாயான 'ஃபோ'வை, மாசசூசெட்ஸ் மாநில செனட்டர் எட்வேர்ட் எம் கென்னடி ஒபாமாவின் மகள்களுக்கு பரிசாக அளித்தார்.
அது முதல் ஒபாமாக அதிபராக இருந்த காலம் வரை வெள்ளை மாளிகையின் செல்லப் பிள்ளையாக இருந்து வந்தது ஃபோ. அந்த சமயத்தில் வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியில் உள்ள புல்வெளியில் போவை அடிக்கடி பார்க்க முடியும்.

சன்னி
பேச்சு துணைக்கு ஆள் இல்லாமல் ஃபோ தனிமையில் தவிப்பதை உணர்ந்த ஒபாமாவின் மனைவி மிச்செல், சன்னி எனும் போர்த்திகீசிய ரக நாய்யை அதற்கு துணையாக அழைத்து வந்தார். இரண்டு நாய்களும் வெள்ளை மாளிகையின் நட்சத்திரங்களாக ஜொலித்து வந்தன.

ஒபாமா வருத்தம்
இந்த சூழலில் ஃபோ நேற்று உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தனது டிவிட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். அதில் "எங்கள் குடும்பம் இன்று ஒரு நல்ல தோழனை, உண்மையான நண்பனை இழந்துவிட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஃபோ எங்களுடன் வாழ்த்து வந்தது. சந்தோஷமான நாட்கள், துக்கமான நாட்கள், சாதாரண நாட்கள் என அனைத்து நாட்களிலும் ஃபோ எங்களுடன் இருந்தது", என பதிவிட்டுள்ளார்.

அருமையான நாய்
மேலும், "வெள்ளை மாளிகையில் இருந்ததால் ஏற்பட்ட அத்தனை பிரச்சினைகளையும் அவன் பொறுத்துக்கொண்டான். சத்தமாக குரைப்பான் ஆனால் கடிக்கமாட்டான். கோடை காலத்தில் நீச்சத்தில் குளத்தில் குதித்து விளையாடுவது அவனுக்கு பிடிக்கும், குழந்தைகளுடன் அன்பாய் பழகுவான், சாப்பாட்டு மேஜையில் சிந்தி சிதறும் உணவுகளுக்காவே வாழ்ந்தான், அவனது முடி அருமையாக இருக்கும்", என போவை பற்றி நினைவு கூர்ந்துள்ளார் ஒபாமா.

போவுக்கு பிரியாவிடை
மிச்செல் ஒபாமா தனது டிவிட்டர் பதிவில், "இன்று (நேற்று) மதியம் எங்கள் குடும்பத்தில் ஒரு பெரிய கஷ்டம் ஏற்பட்டது. புற்று நோயால் போராடி வந்த எங்கள் உயிர் தோழனுக்கு நாங்கள் பிரியாவிடை கொடுக்க வேண்டியதாகிற்று. ஃபோ மீது அன்பு வைத்திருக்கும் அனைவருக்கும் நன்றி. அவனுக்கு பிரியா விடை கொடுப்போம்", என உருகியுள்ளார்.

இரங்கல்
போவின் மறைவு ஒபாமா குடும்பத்தில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் இருந்து அவர்கள் விரைவில் மீண்டு வர வேண்டும் என பலரும் டிவீட் செய்து வருகிறார்கள். மறைந்த போவிற்கு இரங்கல்களும் தொடர்கின்றன.












Click it and Unblock the Notifications