பொட்டு தங்கமாவது வாங்கிடுங்க..தகரத்தால் தாறுமாறாக தங்கம் விலை! டொனால்டால் மார்க்கெட் டோட்டல் டேமேஜ்!
நியூயார்க்: ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த பதிலுக்கு பதில் இறக்குமதி வரி விதிப்பால் உலக அளவில் சந்தைகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. ஏற்கனவே ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3000 டாலருக்கு விற்பனையான நிலையில், செவ்வாய்கிழமை நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,005.09 டாலராக உயர்ந்துள்ளது. இது இந்திய மதிப்பு படி 2 லட்சத்து 67 ஆயிரத்து 623 ரூபாய் 72 பைசாவாகும். ஒரு அவுன்ஸ் தங்கம் என்பது 28.34 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் பொருளாதார பிரச்சனைகள் அல்லது போர் உள்ளிட்ட அரசியல் நிலைகுலைவுகள் ஏற்படும் போது பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கு ஏற்றதாக தங்கம் இருக்கிறது. தொடர்ந்து தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பதும் தங்கத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை 14 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற பிறகு சர்வதேச சந்தையில் 14வது முறையாக தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது.
கடந்தாண்டு 2800 டாலரில் இருந்த தங்கத்தின் விலை தற்போது 3000 டாலரை கடந்திருக்கிறது. கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் அதாவது 28.34 கிராம் தங்கத்தின் விலை 3000 டாலராக இருந்த நிலையில் தற்போது 3005.09 டாலராக புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் 8 கிராம் என்ற சவரன் மதிப்பில் வாங்கப்படுகிறது. அதன்படி இந்தியாவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 66,000 ரூபாயாக இருக்கிறது.
தங்கத்தின் விலை உயர்வு ஏற்கனவே எதிர்பார்த்தது தான். ஆனால் 3000 டாலர் வரை தங்கத்தின் விலை உயரும் என நாங்கள் எதிர்பார்த்த நிலையில் அதன் எல்லையை கடந்து விட்டது. தற்போது அது இன்னும் உயருமா என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. தற்போது நிலவும் வர்த்தக குழப்பம் தொடருமானால் தங்கம் மீதான முதலீட்டு ஆர்வம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தங்கத்தின் விலை 3200 டாலர்/ அவுன்ஸ் என இருக்கலாம். அதாவது அதாவது 28.34 கிராம் தங்கத்தின் விலை 2 லட்சத்து 77 ஆயிரத்து 235 ரூபாயாக அதிகரிக்கலாம் என என யூபிஎஸ் நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து நட்பு நாடுகள் இடையே கூட மோதல் போக்கை கையாண்டு வருகிறார். குறிப்பாக சீனா, கனடா, மெக்ஸிகோ, இந்தியா ஆகிய நாடுகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிக வரி விதிப்பதால், அமெரிக்காவும் அதே அளவு வரி விதிக்கும் என கூறியிருந்தார். மேலும் பிப்ரவரியில் ஸ்டீல் மற்றும் அலுமினியத்திற்கு 25% நிலையான வரி விதிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் புதிய வரிகள் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஐரோப்பிய யூனியனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின், ஷாம்பெய்ன் உள்ளிட்ட மது வகைகளுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக முதலில் செய்ய தங்கத்தை தேர்ந்தெடுத்துள்ளதால் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. மேலும் வரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்பதால் தற்போதாவது குறைந்த அளவிலாவது தங்கத்தின் மீதான முதலீடு நன்மை பயக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications