டிரம்புக்கு குட்டு வைத்த சர்வதேச நீதிமன்றம்! பழிவாங்கினாலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என உறுதி
நியூயார்க்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றவாளி என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டிரம்ப், நீதிமன்றத்திற்கு எதிராக பொருளாதார தடையை அறிவித்தார். ஆனால் அசராத நீதிமன்றம், எப்படி பழிவாங்கினாலும் எங்கள் கடமையிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்று கூறியுள்ளது.
தன்னால் இந்த உலகில் எல்லா நாடுகளையும் கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்துக்கொண்டிருந்த டிரம்புக்கு, நீதிமன்றம் தனது பதிலடி மூலம் குட்டு வைத்திருக்கிறது.

அன்னம் தண்ணி பழக கூடாது என உத்தரவு:
என்னோட தோஸ்து நெதன்யாகுவுக்கு எதிராக தீர்ப்பு கொடுக்கிறாயா? என்று கொந்தளித்த டிரம்ப், சர்வதேச நீதிமன்றத்தின் மீது சில தடை உத்தரவை பிறப்பித்திருந்தார். அதன்படி இனி யாரும் இந்த நீதிமன்றத்துடன் அன்னம் தண்ணி பழக கூடாது என்றும், நீதிபதிகளோ, அல்லது நீதிமன்றத்தின் அலுவலர்களுக்கோ அமெரிக்கா வாசலை மிதிக்க கூடாது, அதற்கு விசா வழங்க மாட்டோம் என்றும் அறிவித்திருந்தார். அடேங்கப்பா சர்வதேச நீதிமன்றத்திற்கு எதிராகவே டிரம்ப் உத்தரவு போட்டுவிட்டார். இனி என்ன ஆகப்போகிறதோ? என பலரும் பேசி வந்தனர்.
குட்டு வைத்த நீதிமன்றம்:
அமெரிக்கா குறித்து, ஆஹா, ஓஹோ என்று பேசப்பட்டு வந்த நிலையில், நீதிமன்றம் தரப்பில் அதிரடியான அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், "பொருளாதார தடை மற்றும் விசா கட்டுப்பாடுகளை விதித்த அமெரிக்காவை இந்த நீதிமன்றம் கண்டிருக்கிறது. அமெரிக்கா விதித்துள்ள தடை, சுதந்திரமாகவும் தடையில்லாமலும் இயங்கும் நீதித்துறையின் பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
உலகம் முழுவதும் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான அப்பாவிகளுக்கு, நீதியையும் நம்பிக்கையையும் வழங்க நீதிமன்றம் தொடர்ந்து செயல்படும். நீதிமன்றத்துடன் அதன் ஊழியர்களும் உறுதியாக நிற்பார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இப்படி ஒரு அறிக்கையை டிரம்ப் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
அமெரிக்காவின் கோபம் ஏன்?:
பாலஸ்தீனமும் இஸ்ரேலும் பக்கத்து பக்கத்து நாடுகள். இந்தியா-பாகிஸ்தான் போல அங்கேயும் சண்டைகள் அடிக்கடி நடந்து வந்திருக்கின்றன. இது ஒரு நாள் போராக வெடித்திருக்கிறது. போருக்கு காரணம் ஹமாஸ் அமைப்புதான், எனவே அதை அழிக்கிறேன் என்று கூறி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தாக்குதலை தீவிரப்படுத்தினார்.
ஆனால் இதில் அப்பாவி பொதுமக்கள் சுமார் 46000 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதுதான் பிரச்சனை. பொதுமக்களை நெதன்யாகுதான் கொலை செய்தார் என்று சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 3 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.
1.நெதன்யாகு - இஸ்ரேலின் பிரதமர்
2.யோவ் கல்லண்ட் - இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர்
3.முகமது டெய்ஃப் - ஹமாஸ் அமைப்பின் தளபதி
இதில், முகமது டெய்ஃப் போரில் உயிரிழந்துவிட்டார். மற்ற இரண்டு பேரும் வெளியே வந்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். இதில் அரசியல் இருக்கிறது. அதாவது அனைத்து நாடுகளாலும் சர்வதேச நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இந்த நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ளாததால், நெதன்யாகு அமெரிக்கா சென்றால் அவரை கைது செய்ய முடியாது. ஆனால் அமெரிக்காவுக்கே நேரடியாக போக முடியாது. அப்படி போனால், சர்வதேச நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளின் வான் எல்லையில் நுழைய வேண்டி வரும். எனவே ஊரை சுற்றிக்கொண்டு நெதன்யாகு அமெரிக்கா சென்றிருக்கிறார்.
இப்படி இருக்கையில், அமெரிக்காவின் தடைகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications