LGBTQIA+ சமூகத்தினரின் நிகழ்ச்சியில் பயங்கரவாத தாக்குதல்.. அமெரிக்கா வார்னிங்! சர்வதேச அளவில் அலர்ட்
நியூயார்க்: சர்வதேச அளவில், LGBTQIA+ சமூகத்தினரின் நிகழ்ச்சிகளில் பயங்கரவாத தாக்குதல் இருக்கும் என அமெரிக்கா அச்சம் தெரிவித்திருக்கிறது. மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்களையும் எச்சரித்திருக்கிறது.
உலகம் முழுவதும் மாற்றுப்பாலினத்தவர்கள் தங்களுக்கான அங்கீகாரத்திற்காக கடுமையாக போராடி வருகிறார்கள். ஆனால், இவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பெரு நாட்டின் அரசாங்கம் மாற்றுப்பாலினத்தவர்களை மனநோயாளிகள் என்று வெளிப்படையாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், விவாதங்களையும் ஏற்படுத்தியிருந்தது.

பெரு நாட்டின் மாற்று பாலினத்தவர்களை அங்கீகரிப்பது குறித்து பல்வேறு விவாதங்கள் நீண்ட காலமாக எழுந்து வருகிறது. இப்படி இருக்கையில், சமீபத்தில் ஒரு அரசாணையில் அந்நாட்டு அதிபர் தினா பலுவரேட் கையொப்பமிட்டுள்ளார். அதில், மாற்றுப்பாலினத்தவர்கள் மனநோயாளிகள் என்றும், அவர்களுக்கான மருத்துவ உதவி இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சர்வதேச நோய்களின் பட்டியலிலிருந்து மாற்றுப்பாலின சிக்கல்களை உலக சுகாதார அமைப்பு நீக்கி இந்த ஆண்டுடன் 34 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனையடுத்து தற்போது இந்த முடிவை பெரு அரசு அறிவித்திருக்கிறது. இந்த உத்தரவு LGBTQ+ மக்களிடம் அதிருப்தியை உருவாக்கும் என்றும், ஆனால் அவர்கள் மாற்று சிகிச்சை எதற்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் அரசு கூறியுள்ளது.
அரசு தரப்பில் என்னதான் சமாதானம் சொன்னாலும், பெரு நாட்டில் பல்வேறு அமைப்பினர்கள் அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அரசின் இந்த முடிவை எதிர்த்து போராட்டங்களை நடத்த இருப்பதாகவும், அரசின் முடிவுகள் திரும்பப் பெறப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இப்படி இருக்கையில், சர்வதேச அளவில் LGBTQ+ சமூகத்தினரின் நிகழ்ச்சிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா எச்சரித்திருக்கிறது.
அதாவது, "வெளிநாட்டில் உள்ள அமெரிக்க குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக பிரைட் நிகழ்வுகளில் அமெரிக்க குடிமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்" என அந்நாட்டு வெளியுறவுத்துறை பயங்கரவாத தாக்குதல் குறித்து எச்சரித்துள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதல் யாரால் நடத்தப்படும், எப்பொது நடத்தப்படும் என்கிற விவரங்களை அமெரிக்கா வெளியிடவில்லை. இருப்பினும், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளால் ஈர்க்கப்பட்ட அமைப்புகளால் இந்த தாக்குதல்கள் நடத்தப்படும் என்று கூறியிருக்கிறது.
பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் LGBTQ+ சமூகத்தினரை அங்கீகரிக்கவில்லை. மட்டுமல்லாது இவர்களுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. இப்படி இருக்கையில் அமெரிக்காவின் எச்சரிக்கை மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications