ஈரான் மீது குண்டுமழை பொழிவோம்.. கண்சிவந்த டிரம்ப் இறுதி வார்னிங்! அணுஆயுத டீலால் அழியும் ஈரான்?
நியூயார்க்: அமெரிக்கா உடன் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இதுவரை இல்லாத வகையில் குண்டுகளை ஈரான் மீது வீசுவோம். கடும் பொருளாதார தடைகளை விதித்து தனிமைப்படுத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் வார்னிங்கை வழங்கி உள்ளார். இதனால் அமெரிக்கா - ஈரான் இடையே கடும் மோதல் வலுத்து போர் வெடிக்கிறதா? என்ற பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே நாளுக்கு நாள் மோதல் என்பது வலுத்து வருகிறது. இதற்கிடையே ஈரான் அணுசக்தி திட்டத்தின் மூலம் அணுஆயுதம் தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எதிர்த்து வருகிறார். ஈரான் அணுஆயுதம் தயாரிக்க கூடாது என்று டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார்.

ஆனால் அமெரிக்கா உடனான உறவு நாளுக்கு நாள் மோசமாகி வருவது, அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் தங்களின் நாட்டுக்கு அணுஆயுதம் இருப்பது தான் பாதுகாப்பு என்று ஈரான் நினைக்கிறது. இதற்கிடையே தான் அணுசக்தி திட்டத்தில் ஒரு ஒழுங்கு முறை வேண்டும். அணுசக்தி திட்டம் மூலம் அணுஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் வகையில் ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பான டீலுக்கு வரும்படி டொனால்ட் டிரம்ப், ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா காமேனிக்கு கடிதம் எழுதினார். ஆனால் ஈரான் அந்த கடிதத்தை ஏற்கவில்லை. ஈரானை தொடும் முன்பு ஒவ்வொரு நாடுகளும் யோசிக்க வேண்டும். இது பழைய ஈரான் இல்லை. எங்களை தொட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அயதுல்லா காமேனி அமெரிக்காவை மறைமுகமாக சாடியிருந்தார். ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான்அமெரிக்காவின் கடிதத்தை புறக்கணித்து இருந்தார். அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்படமாட்டோம் என்று கூறியிருந்தார். அதேபோல் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அபாஸ் அராக்சி, ‛‛இது பழைய ஈரான் அல்ல. அமெரிக்கா சொல்வதையெல்லாம் கேட்க முடியாது. அமெரிக்காசொன்னதை எல்லாம் கேட்ட காலம் மலையேறிவிட்டது'' என்று தடாலடியாக கூறினார்.
இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப் இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் ஈரானுக்கு கடும் வார்னிங்கை கொடுத்துள்ளார். அதோடு அணுசக்தி தொடர்பான டீலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான குண்டுவீச்சை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று வெளிப்படையாக வார்னிங் செய்துள்ளார். அதாவது டொனால்ட் டிரம்பிடம் ஈரானின் அணுசக்தி திட்டம் சார்ந்த ஒப்பந்தம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டிரம்ப் கூறியதாவது:
‛‛அவர்கள் (ஈரான்) டீலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் குண்டுமழையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த குண்டுவீச்சு சம்பவம் என்பது இதுவரை யாரும் பார்த்திடாத வகையில் இருக்கும்'' என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ஈரான் ஒப்பந்தத்துக்கு தயாராகாவிட்டால் secondary tariffs என்பது ஈரான் மீது விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதன்மூலம் ஈரான் மீது கடும் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதிக்கும். அதன்பிறகு ஈரானுடன் வர்த்தகம் செய்யும் பிற நாடுகள் மீதும் அமெரிக்கா வரிகளை விதிப்பதோடு, பொருளாதார தடைகளை விதிக்கும். இதனால் அந்த நாடுகளும் அமெரிக்காவை பகைக்காமல் ஈரான் உடனான வர்த்தகத்தை கைவிடும். இது ஈரானுக்கு பொருளாதார ரீதியாக கூடுதல் நெருக்கடியை தரும்.
இதன்மூலம் மொத்தமாக ஈரானை தனிமைப்படுத்த முடியும் என்பதால் செகண்டரி டேரிப் திட்டத்தையும் டொனால்ட் டிரம்ப் கையில் எடுத்துள்ளார். இருப்பினும் டொனால்ட் டிரம்பின் இந்த தொடர் மிரட்டலுக்கு நடுவே ஈரான் மறைமுகமாக ஓமன் நாட்டின் மூலம் அமெரிக்காவிடம் பேசி வருவதாககூறப்படுகிறது. ஓமன் சார்பில் ஈரான் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி டொனால்ட் டிரம்புக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் அதில் உள்ள அம்சங்கள் குறித்த எந்த விபரமும் வெளியாகவில்லை.
முன்னதாக அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் என்பது கடந்த 2015ம் ஆண்டு போடப்பட்டது. அதன்பிறகு டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக செயல்பட்ட 2018 ம் ஆண்டில் அந்த ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்தார். அதுமட்டுமின்றி ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தார். ஈரானை தனிமைப்படுத்தினார். இப்போது மீண்டும் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான டீலுக்கு டிரம்ப் ஈரானுக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை ஈரான் ஏற்கவில்லை. அமெரிக்காவுடன் அணுசக்தி திட்டம் தொடர்பான எந்த ஒப்பந்தமும் செய்ய முடியாது என்று ஈரான் அறிவித்துள்ளது தான் டொனால்ட் டிரம்பை கோபப்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications