டைட்டானிக் ஹீரோ பெயரை.. கறுப்பு தவளைக்கு வைத்து அழகு பார்த்த ஆய்வாளர்கள்! காரணம் இதுதான்
நியூயார்க்: ஈக்வடார் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தவளை இனத்திற்கு ஹாலிவுட் நடிகரான லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
புதியதாக மொத்தம் 7 உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஒன்றுதான் இந்த தவளை. அரிய வகை உயிரினமாக அறியப்பட்ட இதற்கு டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

ஈக்வடார் தேசிய பல்லுயிர் நிறுவனம், ஈக்வடார் கத்தோலிக்க பல்கலைக்கழகம் மற்றும் சான் பிரான்சிஸ்கோ குய்டோ பல்கலைக்கழகம் (USFQ) ஆகியவற்றின் ஆய்வாளர்கள் சேர்ந்து ஈக்வடாரின் எல் ஓரோ மாகாணத்தில் உள்ள மேற்கு மலை காட்டில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். அரிய உயரினங்களை அடையாளம் காண்பது, இந்த உயிரினங்கள் பெருகியுள்ளதா? குறைந்திருக்கிறதா? என்பதை கண்டறிவதுதான் இவர்களின் வேலை.
இந்த பணியின்போது 6 புதிய உயிர்களை கண்டுபிடித்துள்ளனர். இதில் கறுப்பு தவளையும் ஒன்று. வெள்ளை புள்ளிகளுடன் இருக்கும் இந்த தவளையை இதற்கு முன்னர் யாரும் பார்த்தது கிடையாது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,330 - 1,705மீ உயரத்தில் இந்த வகை தவளைகள் வாழ்ந்து வருகின்றன.
சரி இதெல்லாம் ஓகேதான். ஏன் டைட்டானிக் ஹீரோவின் பெயரை இதற்கு வைத்தார்கள்? என்று கேட்கிறீர்களா? இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதாவது லியோனார்டோ டிகாப்ரியோ வெறும் நடிகர் மட்டும் அல்ல. சூழலியல் ஆர்வலர். அதாங்க, இயற்கை ஆர்வலர். கொஞ்ச காலத்துக்கு முன்னாடி ஈக்வடாரின் யசுனி தேசிய பூங்காவில் எண்ணெய் கிணறு தோண்டும் பணி தொடங்கியது. எண்ணெய் கிணறு வந்தால், பூங்கா இருக்கும் இடம் கடுமையாக பாதிக்கப்படும்.
எனவே பலரும் இந்த திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர். அதில் டிகாப்ரியோவும் ஒருவர். இவரது ஆதரவு குரல், சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது. எண்ணெய் கிணறு திட்டமும் கைவிடப்பட்டது. டிகாப்ரியாவின் இந்த உணர்வுக்கு காரணம் அவரின் சூழலியல் ஆர்வம்தான். கடந்த 1998ம் ஆண்டு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, 'லியோனார்டோ டிகாப்ரியோ அறக்கட்டளையை' அவர் தொடங்கியிருந்தார்.
இப்படி சூழலியல் குறித்து தொடர்ந்து டிகாப்ரியோ குரல் கொடுத்து வருவதால் அவரை கௌரவிக்கும் விதமாக தவளைக்கு, 'ஃபிலோனாஸ்டஸ் டிகாப்ரியோய்' என அவரது பெயரை ஆய்வாளர்கள் வைத்திருக்கிறார்கள்.
இதற்கு முன்னர் இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பாம்பு இனத்திற்கும் இதேபோன்று டிகாப்ரியோவின் பெயர் வைக்கப்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் கோவிட் -19 நாட்களில் வீரேந்தர் பரத்வாஜ் என்பரால் இந்த பாம்பு அடையாளம் காணப்பட்டது. பாம்பின் போட்டோவை அவர் சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்திருந்தார். இது ஆய்வாளர்களை ஈர்த்தது. அவர்கள் அந்த பகுதிக்கு வந்து ஆய்வு செய்து, வீரேந்தர் பரத்வாஜ் பதிவிட்டது புதிய பாம்பின் இனம்தான் என்பதை உறுதி செய்தனர்.
இதனையடுத்து அந்த பாம்புக்கு 'அங்குகுலஸ் டிகாப்ரியோய்' என லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications