அமெரிக்காவில் அடுத்த பயங்கரம்.. நியூயார்க் நகரில் மர்ம நபர் துப்பாக்கி சூடு! சுருண்டு விழுந்த மக்கள்
நியூயார்க்: புத்தாண்டு கொண்டாட்டத்தில் அமெரிக்காவில் அடுத்தடுத்து தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. அங்கு நியூ ஆர்லியன்ஸில் மர்ம நபர் தாக்குதல் நடத்திய சில மணி நேரத்தில், நியூயார்க் நகரிலும் தாக்குதல் நடந்துள்ளது. புதன்கிழமை இரவு நியூயார்க் குயின்ஸில் உள்ள இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்கா 2025 புத்தாண்டை வரவேற்கும் நிலையில், அங்கு அடுத்தடுத்து தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. புத்தாண்டு சமயத்தில் நியூ ஆர்லியன்ஸில் பகுதியில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் டிரக்கை ஓட்டி சென்ற நபர் தாக்குதல் நடத்தினார்.அதில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

அடுத்தடுத்து தாக்குதல்:
அதைத் தொடர்ந்து லாஸ் வேகாஸில் உள்ள டிரம்ப் டவர் ஹோட்டல் அருகே டெஸ்லா சைபர்ட்ரக் கார் வெடித்துச் சிதறியது. இந்த இரு தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில் இப்போது நியூயார்க் நகரிலும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இப்படி அடுத்தடுத்து அங்கு நடந்து வரும் சம்பவங்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நியூயார்க் துப்பாக்கி சூடு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அமாசுரா என்ற இரவு விடுதிக்கு அருகே உள்ளூர் நேரப்படி இரவு 11:20 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் குறைந்தது 10 பேர் காயமடைந்தது இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. காயமடைந்தோர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், அவர்களில் யாருக்கும் மிக மோசமான காயம் எதுவும் ஏற்படவில்லை என்று நியூயார்க் காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்த அமாசுரா கிளப்பில் வழக்கமாகவே டிஜே இசை நிகழ்ச்சிகள் அப்போது நடத்தப்படும். அதன்படி அங்கு டிஜே நிகழ்ச்சி நடந்த நிலையில், அப்போது தான் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்துள்ளது. கடந்த ஆண்டு உயிரிழந்த தாதா ஒருவரின் நினைவாக ஒரு பிரைவேட் விருது நடந்துள்ளது. அங்கு உள்ளே செல்ல சுமார் 80 பேர் காத்திருந்த நிலையில், அப்போது தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
பின்னணியில் யார்:
இது குறித்து நியூயார்க் போலீசர் இதுவரை எந்த அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்ற போதிலும், சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாகப் பல வீடியோக்கள் பரவி வருகிறது. அதில் கிளப்பிற்கு வெளியே ஏராளமான போலீஸ் கார்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் நிற்பது தெளிவாகத் தெரிகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நடத்தியது யார் என்பது குறித்த தகவல்களையும் போலீசார் வெளியிடவில்லை.
இதுபோல அடுத்தடுத்து தாக்குதல் நடந்து வருவது அமெரிக்க மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், துப்பாக்கி வைத்திருக்கக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்து வருகிறது. புத்தாண்டு சமயத்தில் இப்படி அடுத்தடுத்து அங்குத் தாக்குதல் நடந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications