ஒழுங்கா கப்பலை அனுப்புங்க.. இல்லனா மாட்டிப்போம்! - நேட்டோ நாடுகளிடம் கெஞ்சிய ட்ரம்ப்.. என்ன நடந்தது?
நியூயார்க்: அமெரிக்கா - இஸ்ரேல் ஒருபக்கம், ஈரான் மறுபக்கம் என மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதன் எதிரொலியாக, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) ஈரானால் முடக்கப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகளுக்குச் செல்லும் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது பாணியில் அதிரடி ஆட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

ட்ரம்ப் போட்ட 'ஆர்டர்'!
"இந்தக் கடல் பாதை வழியாக எண்ணெய் வாங்கும் நாடுகள் சும்மா வேடிக்கை பார்த்தால் எப்படி? உங்கள் நாட்டுச் சரக்குக் கப்பல்களைப் பாதுகாக்க நீங்களே போர்க்கப்பல்களை அனுப்புங்கள்" என்று ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுக்கு ட்ரம்ப் 'கெடு' விதித்துள்ளார்.
குறிப்பாக, நேட்டோ (NATO) உறுப்பு நாடுகள் இந்த விஷயத்தில் அமெரிக்காவுக்கு உதவவில்லை என்றால், அந்த அமைப்பின் எதிர்காலமே "மிக மோசமாக" இருக்கும் எனப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். ஆனால் இதை மிரட்டல் பாணியில் இல்லாமல் கெஞ்சும் தொனியில் அவர் பேசி உள்ளாராம்.
"யாரும் வரலயா?" - நழுவும் நாடுகள்!
ட்ரம்ப் இவ்வளவு சத்தம் போட்டும், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் இப்போதைக்குக் கப்பல்களை அனுப்பும் எண்ணம் இல்லை என நழுவிவிட்டன. அவரின் மிரட்டலுக்கோ அல்லது கெஞ்சலுக்கோ மதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
ஜப்பான்: "எங்கள் நாட்டு சட்டதிட்டங்களின்படி ராணுவத்தை வெளியே அனுப்புவது சிக்கல்" எனச் சொல்லிவிட்டு, தட்டுப்பாட்டைச் சமாளிக்கத் தன்னிடம் இருந்த அவசர கால எண்ணெய் இருப்பை (Oil Reserves) எடுக்க ஆரம்பித்துவிட்டது.
இங்கிலாந்து: "கப்பல்களை அனுப்பினால் போர் இன்னும் தீவிரமாகும், வேண்டுமானால் கண்ணிவெடிகளை அகற்ற வானில் இருந்து உதவும் கருவிகளைத் தருகிறோம்" எனப் பட்டும் படாமலும் பதில் சொல்லியுள்ளது.
சீனாவுக்கு செக்!
தனது அடுத்த இலக்காக சீனாவைத் திருப்பியுள்ளார் ட்ரம்ப். "சீனாவுக்குத் தேவையான 90% எண்ணெய் இந்தப் பாதை வழியாகத்தான் போகிறது. அதனால் அவர்களும் களத்தில் இறங்க வேண்டும். இல்லையென்றால், அதிபர் ஜி ஜின்பிங்குடன் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தையைத் தள்ளி வைப்பேன்" என மிரட்டியுள்ளார்.
ஈரான் என்ன சொல்கிறது?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானின் கடற்படை மற்றும் ஏவுகணைத் தளங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன. ஆனாலும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, "நாங்கள் யாரிடமும் போர் நிறுத்தம் கேட்கவில்லை, பேச்சுவார்த்தைக்கும் வரவில்லை. எங்களைத் தற்காத்துக் கொள்ளத் தெரியும்" என ஆவேசமாகப் பேசியுள்ளார்.
பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு?
இந்த மோதலால் சர்வதேசச் சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 104 டாலரைத் தாண்டியுள்ளது. துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால், விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
"இந்த வார் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வரும், அப்போது எண்ணெய் விலை தானாகவே குறையும்" என ட்ரம்ப் தரப்பு கூறினாலும், தற்போதைய சூழல் உலகப் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. ஈரானை இப்போதைக்கு டிரம்ப்பால் கட்டுப்படுத்தவே முடியாது என்கிறார்கள் உலக அரசியல் வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications