ஐநா பொதுக்குழுவில் வெடிக்கும்.. இஸ்ரேல்-பாலஸ்தீன பஞ்சாயத்து! போர் நிறுத்தம் சாத்தியமாகுமா?
நியூயார்க்: தங்கள் மீதான ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காசா மீது கடந்த 19 நாட்களாக இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புப் படை கொடூர தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்தான் இன்று ஐநா பொதுக்குழு கூடுகிறது. இதில் போர் நிறுத்தம் குறித்து தீர்மானங்கள் கொண்டுவரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்கத்தில் அகதிகளாக வாழ பாலஸ்தீனத்திற்குள் வந்த யூதர்கள் மெல்ல மெல்ல அங்கிருந்த மக்களை விரட்டிவிட்டு தங்களுக்கு என இஸ்ரேல் எனும் சொந்த நாட்டை உருவாக்க தொடங்கினர். தாய் நாட்டை இழந்த 23 லட்சம் பாலஸ்தீன மக்கள் மேலும், மேலும் இஸ்ரேலால் ஒடுக்கப்பட்டு கடைசியாக 'காசா' எனும் 25 மைல் நீளமும், 6 மைல் அகலமும் துண்டு நிலத்தில் சுருக்கப்பட்டனர். இஸ்ரேலின் இந்த அடக்குமுறைக்கு பின்னால் பிரிட்டனும், அமெரிக்காவும் இருந்திருக்கிறது. இதுதான் பாலஸ்தீன பிரச்னையின் தொடக்கப்புள்ளி.

தங்கள் நிலத்தில் சுதந்திரமாக வாழ்ந்த பாலஸ்தீனர்கள் எதிர்கொண்ட துயரங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இப்படி ஆக்கிரமிப்பு செய்து இஸ்ரேல் உருவானபோது உலகமே அதற்கு எதிராக நின்றது. அந்த வரிசையில் இந்தியாவும் இருந்தது என்பது தனிக்கதை. இப்படி ஒடுக்கப்படட பாலஸ்தீன மக்கள் ஒரு கட்டத்தில் அடக்குமுறையை எதிர்த்து சண்டை செய்ய தொடங்கினர். இது ஆயுத போராட்டமாகவும் பரிணமித்தது. ஹமாஸ் அமைப்பும் உருவானதும் அப்படிதான். ஹமாஸ், தங்கள் நாட்டின் விடுதலைக்காக அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதலை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும்.
ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணைகளை கொண்டு பயங்கரவாத தாக்குதலை நடத்தியது. இதில் சுமார் 1400 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானோர் பணையக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். அவ்வளவுதான் மத்திய தரைக்கடல் பகுதியில் போர் தீ பரவிக்கொண்டது. 7ம் தேதி தொடங்கி இன்று வரை இஸ்ரேல் பழிவாங்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.
எந்த அளவுக்கு தீவிரம் எனில், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா ஓராண்டுக்கு வீசிய குண்டுகளை, இஸ்ரேல், காசா மீது ஒரே வாரத்தில் வீசிவிட்டது. இந்த அளவு தீவிரமான தாக்குதல் காரணமாக இதுவரை 2,360 குழந்தைகள் உட்பட 5,791 பேர் உயிரிழந்துள்ளனர். 15,000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மறுபுறம் காசா மக்களுக்கு குடிநீர், கேஸ், பெட்ரோல், டீசல், மின்சாரம், உணவு பொருள், மருந்து பொருட்கள் அனைத்து இணைப்புகளையும் இஸ்ரேல் துண்டித்திருக்கிறது.
இப்படி இருக்கையில்தான் இன்று ஐநா பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. முன்னதாக நடைபெற்ற ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் போர் நிறுத்தம் குறித்து ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கொண்டுவந்த தீர்மானங்கள் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யாவும், சீனாவும் தங்களது வீட்டோ பவரை பயன்படுத்தி தள்ளுபடி செய்திருக்கிறது. எனவே இந்த முறையும் போர் நிறுத்தம் தொடர்பாக தீர்மானங்களை பாலஸ்தீன ஆதரவு நாடுகள் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐநா பொதுக்குழுவில் வீட்டோ பவரை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.












Click it and Unblock the Notifications