ஷம்சுத் தின் ஜப்பார்.. அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தை சீர்குலைத்த டிரைவர்.. பின்னணி என்ன?
நியூயார்க்: நியூ ஆர்லியன்ஸில் மக்கள் மீது வாகனத்தை ஏற்றி கொன்று பயங்கரவாத சம்பவத்தை அரங்கேற்றியவர் 42 வயதான ஷம்சுத் தின் ஜப்பார் என்பது தெரியவந்துள்ளது. ஷம்சுத் தின் ஜப்பார் ஓட்டி வந்த வாகனம் மோதி 10 பேர் பலியானார்கள். 35 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலை நிகழ்த்திய ஷம்சுத் தின் ஜப்பார் அமெரிக்க போலீசாரால் நடுரோட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க நேரப்படி அதிகாலை 3 மணிக்கு நியூ ஆர்லியன்ஸ் நகரின் புகழ்பெற்ற போர்பன் தெருவில் பிக்கப் வண்டியை விட்டு மக்களை நசுக்கி கொன்றவர் 42 வயதான ஷம்சுத் தின் ஜப்பார் என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேர் காயம் அடைந்தனர். குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட ஷம்சுத் தின் ஜப்பாரை போலீசார் சுட்டுக்கொன்றனர். அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஏஆர் பாணி துப்பாக்கியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பயங்கரவாத சம்பவம் என்று அமெரிக்காவின் எப்ஐஐ அதிகாரிகளால் இந்த சம்பவம் தற்போது குறிப்பிடப்படுகிறது. இந்த சம்பவத்தை நிகழ்த்திய டிரைவர் ஷம்சுத் தின் ஜப்பார் டெக்சாஸில் பிறந்தவர் என்றும், 10 வருடம் ராணுவத்தில் பணியாற்றியவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் கொலைக்கு சம்சுத் தின் ஜப்பார் பயன்படுத்திய பிக்கப் வாகனம் டெக்சாஸில் உரிமம் பெற்றதற்கான வாகன பதிவுடன் இருந்தது என்றும், அது கடந்த மாதம் தெற்கு எல்லையைத் தாண்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. நவம்பர் 16 ஆம் தேதி அன்று டெக்சாஸின் ஈகிள் பாஸில் இருந்தது என்றும், மேலும் அந்த பிக்கப் டிரக் வாகனம் தெற்கு எல்லையைத் தாண்டி அமெரிக்காவிற்குள் வந்ததை பார்த்தாகவும் சில அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அதேநேரம் எல்லையைத் தாண்டி வந்த ஓட்டுநர் தான் இந்த சம்பவத்தை நிகழ்த்தினாரா என்பதை அதிகாரிகள் உறுதி செய்யவில்லை.. அதாவது எல்லையை கடந்து வாகனம் வந்தபோது வாகனத்தை ஓட்டியவர்தான் தாக்குதல் நடத்தியவர், அந்த வாகனத்தை ஓட்டிச் சென்றவர் என்பது உறுதி செய்யப்படவில்லை.
இன்று என்ன நடந்தது: ஷம்சுத் தின் ஜப்பார் ஒரு பிக்கப் டிரக் வாகனத்தின் பின்னால் கருப்பு இஸ்லாமிய கலிபா கொடியை ஒட்டியிருந்தாராம். பின்னர் ஷம்சுத் தின் ஜப்பார் வேண்டுமென்றே காவல்துறையின் தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டம் நடந்த கூட்டத்தின் மீது வாகனத்தை ஓட்டியுள்ளார். அத்துடன் அவர் வாகனத்தில் இருந்து குதித்து போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக போலீசார் சுட்டதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்த தாக்குதலில் காயமடைந்த 35 பேர் நகரம் முழுவதும் உள்ள ஐந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (அதிபர் பதவி காலம் முடிய போகிறது), "விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. போர்பன் தெரு தாக்குதல் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். எப்.பி.ஐ அமைப்பு இந்த சம்பவத்தை பயங்கரவாத செயலாக கருதி விசாரிக்கிறது. மிகப்பெரிய அளவில் மரணம் ஏற்படுவதையும். காயம் ஏற்படுவதையும் தடுத்து நிறுத்திய நியூ ஆர்லியன் போலீசுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த விவகாரத்தில் முடிந்தவரை விரைவாக விசாரித்து, என்ன நடந்தது என்பதைக் கண்டறியவும், எந்த வகையான அச்சுறுத்தலும் எங்கும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.
இதனிடையே அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள (இன்னும் பொறுப்பேற்கவில்லை) டிரம்ப், போர்பன் தாக்குதல் மோசமான பயங்கரவாத தாக்குதல் என்று விமர்சித்தார். "நம் நாட்டில் (அமெரிக்காவில்) குற்ற விகிதம் இதுவரை யாரும் கண்டிராத அளவில் உள்ளது. நியூ ஆர்லியன்ஸ் காவல் துறையின் துணிச்சலான செயலை பாராட்டுகிறேன். பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்கள் அனைவருடனும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்" என்றார்.












Click it and Unblock the Notifications