அமெரிக்காவில் நுழைய 12 நாட்டினருக்கு தடை.. டொனால்ட் டிரம்ப் போட்ட அதிரடி உத்தரவு..லிஸ்ட்டை பாருங்க
நியூயார்க்: அமெரிக்காவில் நுழைய 12 நாட்டினருக்கும் தடை விதித்தும், மேலும் 7 நாட்டை சேர்ந்தவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தும் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு என்பது வரும் 8 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் செயல்பட்டு வருகிறார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் வெளிநாட்டினர் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதை தடுக்கும் நடவடிக்கையை தீவிரமாக எடுத்து வருகிறார்.

அந்த வகையில் தான் டொனால்ட் டிரம்ப் இப்போது முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி ஈரான் உள்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அதிரடியாக தடை விதித்துள்ளார். மேலும் 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளார். இந்த நாடுகளை சேர்ந்த மக்களிடம் இருந்து அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதால் இந்த நடவடிக்கையை டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாத், காங்கோ, இகுவடோரியல் கயானா, எரித்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கிறது. தாலிபான்களை அமெரிக்க உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. அங்கிருந்து வரும் மாணவர்கள் அதிகமானவர்கள் சட்டவிரோதமாக தங்கி வருகின்றனர். மேலும் ஆப்கானிஸ்தானில் முறையாக பயணிகளை சோதிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
அதேபோல் பர்மாவை எடுத்து கொண்டால் சுற்றுலா பயணிகளாக வருவோரில் 27 சதவீதம் பேர் அமெரிக்காவில் தங்குகின்றனர். அதன்பிறகு அவர்களை பர்மா மீண்டும் ஏற்கவும் மறுத்து வருகிறது. இதனால் பர்மாவை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சாட், காங்கோ, கயானா, ஹைட்டி, நாட்டினரின் சட்டவிரோத தங்கல் என்பது 49.54 சதவீதமாக உள்ளது. இவர்கள் சுற்றுலா, பிசினஸ் விசாவில் பயணித்து சட்டவிரோதமாக தங்குகின்றனர். எரித்ரியா நாட்டை எடுத்து கொண்டால் அவர்களிடம் முறையான ஆவணங்கள் என்பது இல்லை. மேலும் வெளிநாடு பயணிப்போரின் குற்ற பின்னணியை அந்த நாடு சரிபார்ப்பது இல்லை.
மேலும் ஈரானை எடுத்து கொண்டால் அமெரிக்காவுக்கும், அந்த நாட்டுக்கும் இடையே பிரச்சனை உள்ளது. ஈரானை பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா கூறி வருகின்றனர். இதனால் ஈரான் நாட்டினருக்கு அமெரிக்கா அனுமதி மறுத்துள்ளது.
லிபியா அரசு செயல்பாடு சரியாக இல்லை. அங்கும் பயங்கரவாதிகள் உள்ளதால் அமெரிக்கா அந்த நாட்டினருக்கு அனுமதி வழங்கவில்லை. சோமாலியாவை எடுத்து கொண்டால் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான இடமாக உள்ளது. அங்கு மக்களின் ஆவணங்கள் முறையாக சரிபார்ப்பது இல்லை. இதனால் சோமாலியா மக்களுக்கு அமெரிக்கா அனுமதி மறுத்துள்ளது.
சூடானை எடுத்து கொண்டால் மாணவர்கள், பிசினஸ்மேன்களின் ஆவணங்களை அந்த நாட்டு நிர்வாகம் சரிபார்ப்பது இல்லை. அதேபோல் ஏமனை எடுத்து கொண்டால் அங்கு கிளர்ச்சி குழுக்கள் உள்ளன. ஹவுதிக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பெரிய மோதல் நடந்து வருகிறது. இதனால் ஏமன் நாட்டினருக்கு அமெரிக்கா அனுமதி மறுத்துள்ளது.
இதுதவிர மேலும் சில நாடுகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புருந்தி (Burundi), கியூபா, லாஸ், சியாரா லியோன் (Sierra Leone), டோகோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுலா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு செல்லலாம். ஆனால் அவர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்ல அலுவலகமான வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‛‛இந்த உத்தரவு அந்தந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் சோதனை, சரிபார்ப்பு நிலவும் குறைபாடுகள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு மிக அதிகமான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த வகையில் 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அபிகேல் ஜாக்சன் கூறுகையில், "நமது நாட்டிற்கு வந்து நமக்கு பிரச்சனையை விளைவிக்க விரும்பும் வெளிநாட்டு நபர்களிடம் இருந்து அமெரிக்கர்களை பாதுகாப்பேன் என்று டிரம்ப் வாக்குறுதி அளித்து இருந்தார். இப்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார்'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications