வரி பதற்றத்திற்கு நடுவே.. இந்தியாவுக்கு விசிட் அடிக்கும் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ்!
நியூ யார்க்: அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் மற்றும் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் இந்த மாத இறுதியில் இந்தியா வருகை தர உள்ளனர். ஏப்ரல் 21 முதல் 25 ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்கா பல்வேறு நாடுகள் மீது வரியை விதித்து இருக்க கூடிய நிலையில், ஜேடி வான்சின் இந்திய பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் இந்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 21 ஆம் தேதி தனது மனைவி உஷா மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோருடன் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

ஜேடி வான்ஸ்சின் மனைவி உஷா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது கவனிக்கத்தக்கது. தனிப்பட்ட பயணமாக இந்தியாவுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு அடுத்தபடியாக மிகவும் சக்தி வாய்ந்த நபராக உள்ள ஜேடி வான்சின் இந்திய பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜேடி வான்ஸ்க்கு பிரதமர் மோடி விருந்து அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் மீதும் அமெரிக்கா பரஸ்பர வரியை விதித்துள்ளது. அமெரிக்கா விதித்துள்ள இந்த பரஸ்பர விதியால் சர்வதேச அளவில் பொருளாதார வரி பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியா மீதும் 26 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. தற்போது பல்வேறு நாடுகளின் கோரிக்கையை ஏற்று 90 நாட்களுக்கு பரஸ்பர வரியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
சீனா மீது மட்டும் விதியை டிரம்ப் விலக்கிக் கொள்ளவில்லை. கிட்டத்தட்ட அந்த நாடு மீது மட்டும் 145 சதவீதம் வரியை டிரம்ப் விதித்து இருக்கிறார். டிரம்பின் வரி விதிப்பு காரணமாக சர்வதேச அளவில் வரி பதற்றம் அதிகரித்து இருக்க கூடிய சூழலில், துணை அதிபர் ஜேடி வான்ஸ் இந்திய வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்த வர்த்தக கூட்டாளிகள் விரும்புவதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருந்தார்.
அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் இந்தியா வருகை தருவதாக அறிவிப்பு வெளியான நிலையில், பியூஷ் கோயல் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. தனிப்பட்ட பயணமாக இருந்தாலும் வரி விதிப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை நடத்தப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
ஏப்ரல் 21 ஆம் தேதி இந்தியா வருகை தரும் ஜேடி வான்ஸ்க்கு மதிய உணவு விருந்தை பிரதமர் மோடி அளிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆக்ரா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கும் ஜேடி வான்ஸ் செல்ல உள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications