நிலநடுக்கத்தால் மிக மோசமான பாதிப்பு.. மியான்மருக்கு உதவுவோம் என டிரம்ப் அறிவிப்பு
நியூயார்க்: தாய்லாந்து, மியான்மர் நாடுகளில் நேற்று 7.7 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் 150-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதில் மியான்மரில் பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது. அங்கு தற்போது உள்நாட்டில் கிளர்ச்சி, ஆயுதக்குழு போராட்டம் நடந்ததால் பொதுமக்களுக்கு உதவி கிடைப்பதில் சிக்கல் அதிகமாக இருக்கிறது. தற்போதைய நிலையில் மியான்மர் உலகின் எந்த நாடு உதவினாலும் ஏற்க தயாராக இருக்கிறது. இந்த சூழலில் மியான்மருக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் நேற்று மதியம் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. மியான்மர் நாட்டின் மண்டலே நகரத்தில் இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அதைத்தொடர்ந்து 6.4 ரிக்டரில் மீண்டும் அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. மியான்மரில் பாதிப்பு அதிகமாக உள்ளது. பலர் பலியாகி உள்ளனர். கட்டிடங்கள் இடிந்துள்ளன. இதன் காரணமாக மியான்மர் நாட்டின் ராணுவ அரசாங்கம் இதை அவசர நிலையாக அறிவித்தது.

மியான்மர் நாட்டின் தலைநகரான நேபிடாவ் மற்றும் மண்டலே உள்ளிட்ட 6 மண்டலங்களில் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது. ஆனால் மியான்மரில் தற்போது பல இடங்களிலும் உள்நாட்டில் கிளர்ச்சி, ஆயுதக்குழு போராட்டம் நடந்ததால் பொதுமக்களுக்கு உதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் உதவிகள் போய் சேருவதில் சிக்கல் அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில் மியான்மர் உலகின் எந்த நாடு உதவினாலும் ஏற்க தயாராக உள்ளது. இந்த சூழலில் மியான்மருக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். நாங்கள் நிச்சயம் உதவுவோம் என்று டிரம்ப் உறுதிப்பட செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் நகரை பொறுத்தவரை வானத்தையே எட்டி பிடிக்கும் வகையில் பல உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ன. அங்கு வானுயர்ந்த ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது. அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானார்கள். அதே கட்டிடத்தில் பணியில் இருந்த 90 பேர் மாயமானார்கள். அவர்கள் இடிபாடுகளுக்குள் புதைந்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
மியான்மரில் மட்டும் நிலநடுக்கத்தால் 150 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம் நிலவுகிறது. மேலும் 730 பேர் காயமடைந்தனர், ''இறப்பு எண்ணிக்கை மற்றும் காயங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கில், சீனாவின் யுனான் மற்றும் சிச்சுவான் மாகாணங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது, மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்திய மாநிலங்களிலும் உணரப்பட்டது. மேற்கு வங்காளம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் லேசான நில அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். மணிப்பூரில் இம்பால் மற்றும் உக்ருல் மாவட்டங்கள் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேகாலயாவில் கிழக்கு காரோ மலை மாவட்ட பகுதிகளிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. ஆனால் பாதிப்பு எதுவும் இல்லை..












Click it and Unblock the Notifications