பைபர்ஜாய் புயல்.. உடனே வேலைய காட்டுதே.. திடீர்னு சூழ்ந்த மேகம்.. வெளுத்த மழை.. ஊட்டியெல்லாம் குளுகுளு
ஊட்டி: தமிழகமெங்கும் பலத்த மழை கொட்ட போவதாக அறிவிப்புகள் வெளியாகிய நிலையில், நீலகிரி மாவட்டத்திலும், மழைச்சாரல் பொழிந்தபடியே உள்ளன. இந்த ரம்மியமான சூழலை சுற்றுலா பயணிகள், அனுபவித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும்கூட, பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்துகிறது.. அதிலும் சென்னையில் தினமும், 110 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி அனலடித்து வருகிறது. இதனால், இரவு நேரங்களிலும் புழுக்கத்தில் சென்னைவாசிகள் புழுங்கி தவித்துவருகிறார்கள்.

இன்றும்கூட, சென்னையில் காலையில் இருந்தே மேக மூட்டமாக காணப்பட்டது... சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது.. இதனால் வெப்பமும் ஓரளவு குறைந்து காணப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்: இதனிடையே, தமிழகத்தில், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையமும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று அதி வேகத்தில் வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய கூடும் என்று தகவல் தெரிவித்துள்ளது... தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், திருவாரூர், தர்மபுரி, புதுக்கோட்டை, பெரம்பலூர், நாமக்கல், திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம்: இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வழக்கமாக சீசன் நேரங்களில் மாலை நேரம் வரை வெயில் அடிக்கும்.. ஆனால், இந்த முறை நிலைமையே தலைகீழானது.. சீசன் துவங்கும்போதே மழையும் சேர்ந்தே பொழிய ஆரம்பித்தது.. சுற்றுலா பயணிகள் வழக்கம்போல் இந்த முறையும், நீலகிரியில் குவிந்தனர்.. சில சமயம் வெயில் வாட்டினாலும், பெரும்பாலான நேரங்களில் மழை கொட்டியது.. இதனால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது.
வாகன நெரிசல்: வாகன நெரிசல், மழை காரணமாக பல்வேறு இடங்களில் ஊட்டியில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். நேற்றும் கூட காலையிலேயே கும்மிருட்டு சூழ்ந்தது.. தற்போது பள்ளி விடுமுறை முடிந்துள்ளதால், சுற்றுலா பயணிகளின் வருகையும் ஓரளவு ஊட்டியில் குறைந்து வருகிறது. அதேசமயம், ரம்மியமான சூழலும், குளுகுளு காற்றும், சில்லென்ற சூழலும் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இரவு நேரங்களில் மழை பொழிவு அதிகமாகவே இருக்கிறது.. விடிகாலை நேரங்களில் கடந்த 4 நாட்களாகவே சாரல் மழை பெய்து வருகிறது. சாயங்கால நேரங்களிலும், குளிர்வாட்ட துவங்கி விடுகிறது.. காலை நேரங்களிலேயே வாகன ஓட்டிகள், விளக்குகளை எரிய விட்டு பயணித்து வருகிறார்கள்.. சாலைகளிலும் தெருவிளக்கு எரிந்தபடியே உள்ளன.
ஏமாற்றம்: நேற்று முன்தினமும், ஊட்டி பஸ் ஸ்டாண்டு நிலையம், பைக்காரா படகு இல்லம், குன்னூரில் டால்பினோஸ், லேம்ஸ்ராக், உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.. மாலை நேரத்தில் கோத்தகிரி பகுதியிலும் மழை பெய்தது.. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த மழையால் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளிலேயே முடங்கினர். மேலும் முக்கிய சுற்றுலாத்தலங்களை காண முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
வானிலை மையம்: இதற்கு நடுவில், பைபர்ஜாய் புயல் மிக தீவிர புயலாக மாறி உள்ளதால், தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை உள்ளது. நாளை முதல், 8, 9, 10,11 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய கூடும் என்று வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான அறிகுறி நீலகிரியிலும் தென்பட துவங்கிவிட்டது.. வழக்கம்போல இல்லாமல், நீலகிரியின் குளிர்ச்சி சூழலில், கோடைகாலம் தணிந்து கொண்டிருக்கிறது..!!












Click it and Unblock the Notifications