டீக்கடைக்காரர் கூப்பிட்டதுமே.. பின்னாடியே போன எல்.முருகன்.. அங்கே கருணாநிதி - ஸ்டாலின்.. ஆஹா நீலகிரி
ஊட்டி: திமுக அரசை கடுமையான விமர்சித்துக்கொண்டே, பாஜகவுக்கு ஓட்டுக்களையும் நீலகிரியில் திரட்டி வருகிறார் மத்திய அமைச்சர் எல்.முருகன். திடீர்னு நேற்று நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. தமிழகமெங்கும் பிரச்சாரங்கள் தீவிரமாகி வருகின்றன.. அந்தவகையில் நீலகிரியிலும் பரபரப்பும், எதிர்பார்ப்பும் கூடிவருகிறது.

ஒருபக்கம் திமுகவின் ஆ.ராசா, மறுபக்கம் பாஜகவின் எல்.முருகன், இதற்கு நடுவில் அதிமுகவில், முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் களமிறங்கியிருப்பதால், நீலகிரி தொகுதியே ஸ்டார் தொகுதியாகிவிட்டது. 3 கட்சிகளின் பிரச்சாரமும் அனலடித்து கொண்டிருக்கிறது.
பிரச்சாரம்: மத்திய அமைச்சர் எல்.முருகன் நேற்றுகூட, அன்னூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தூ ராம்பாளையம், கஞ்சப் பள்ளி, அல்லப்பாளையம், அ.மேட்டுப்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது, பாஜகவின் பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.
"கிராமப்புற மக்களுக்கு உஜ்வாலா திட்டத்தில் ரூ.400 மானியத்தில் சமையல் கேஸ் வழங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.. ஆனால் திமுக அரசு விவசாயிகளை ஒழிக்க வேண்டும், அவர்களது வாழ்வாதாரத்தை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நிலங்களை தாரை வார்க்க முயற்சிக்கிறது.. இதனை எதிர்த்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு தடுக்கப்பட்டது.
சிப்காட்: அன்னூரில் சிப்காட் அமைக்க திமுக மீண்டும் முயற்சித்தால் பாஜக சார்பில் ஒவ்வொரு தொண்டரும் தன்னுடைய உயிரை கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம்" என்றார்.
சில நாட்களுக்கு முன்பு நம்முடைய, "ஒன் இந்தியா" தமிழுக்கு எல்.முருகன் சிறப்பு பேட்டி ஒன்றை தந்திருந்தார். அப்போதும்கூட திமுகவை காரசாரமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
பிரதமர் மோடி: "எங்களுடைய மிகப்பெரிய ஹீரோ நரேந்திர மோடி. மோடி முகம்தான் பாஜகவிற்கு அடையாளம், பலம். 1 கோடியே 20 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு மாதந்தோறும் 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு இலவசமாக தநது வருகிறோம். ஆனால், திமுக அதை மறைத்து வருகிறது.
மத்திய அரசின் கால்நடை ஆம்புலன்ஸ் திட்டத்தை பிரதமர் மோடி படம் போட வேண்டுமே என்பதற்காக, திமுக அரசு நிறுத்தி வைத்துள்ளது. ஜல் ஜீவன் மிஷன், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என பல திட்டங்களுக்கு தங்கள் ஸ்டிக்கர்களை ஓட்டி, தமிழ்நாடு அரசுக்கு தடையாக இருக்கிறது. இப்போது, திமுக அரசின் மீது மக்கள் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். காரணம் மக்களின் அடிப்படை தேவைகளை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. ஸ்டாலின் மீதும், ஆ.ராசா மீதும் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்" என்று சீறியிருந்தார்.
எல்.முருகன்: அந்தவகையில், பேட்டிகளிலும், பிரச்சாரங்களிலும் திமுகவை மறக்காமல் குற்றஞ்சாட்டியும், விமர்சித்தும் வருகிறார் எல்.முருகன். நேற்றைய தினமும் திமுகவை கரியாக்கவுண்டனூர் கிராமத்தில் திமுகவை விமர்சித்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் எல்.முருகன்.. அப்போது அந்த பகிராமத்தை சேர்ந்த, பழனிசாமி என்பவர், எல்.முருகனிடம் சென்று, தன்னுடைய டீக்கடைக்கு வருமாறு அழைத்தார்.. பழனிசாமி சொந்தமாக டீ கடையை நடத்தி வருகிறார்..
அதுமட்டுமல்ல, பழனிசாமி திமுகவின் தீவிரமான தொண்டர் ஆவார். எனினும், டீ குடிக்க வருமாறு எல்.முருகனுக்கு அழைப்பு விடுக்கவும், எல்.முருகனும் அவரது அழைப்பை ஏற்று அந்த கடைக்கு சென்றார்.. டீக்கடைக்கு உள்ளே நுழைந்ததுமே, மறைந்த கலைஞர் போட்டோ பெரிதாக சுவற்றில் மாட்டப்பட்டிருந்தது.. அதேபோல, முதல்வர் ஸ்டாலினின் போட்டோ பொறித்த காலண்டரும் மாட்டப்பட்டிருந்தது.
திமுக தொண்டர்: அங்கே போடப்பட்டிருந்த பெஞ்சில் வந்து உட்கார்ந்த எல்.முருகன், சிறிது நேரம் டீக்கடைக்காரர் பழனிசாமியுடன் பேசிக்கொண்டிருந்தார்.. பழனிசாமி தந்த டீ-யை வாங்கி குடித்த எல்.முருகன், அந்த டீ-க்கு உரிய காசையும் தந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
ஆனால் அதற்குள் பழனிசாமியின் டீ கடைக்கு, எல்.முருகன் வந்திருக்கிறார் என்ற செய்தி கேள்விப்பட்டு, ஏராளமான பொதுமக்கள் திரண்டுவிட்டனர்.. டீக்கடை முன்பு கூடியிருந்த பொதுமக்களிடம், தாமரை சின்னத்துக்கு அவர் ஓட்டுப்போடுங்கள் என்று கேட்டுக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டு சென்றார் எல்.முருகன். திமுக தொண்டர் டீக்கடைக்கு எல்.முருகன் வந்துபோன செய்தி, பலரையும் ஆச்சரியப்பட வைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications