"நீதிமன்றங்களை கண்டு அஞ்சாத பிரதமர்.. முதல்வர் ஸ்டாலினை பார்த்து பயப்படுகிறார்.." ஆ.ராசா அட்டாக்
நீலகிரி: திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த நீலகிரி எம்.பி ஆ.ராசா, பாஜக மற்றும் அதிமுகவைக் கடுமையாகச் சாடி பேசினார்.
Recommended Video
தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
மாநிலம் முழுவதும் வரும் சனிக்கிழமை (பிப். 19) ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22இல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல முனை போட்டி நிலவுகிறது. கடந்த மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல் சமயத்தில் அமைத்த அதே கூட்டணியுடன் திமுக இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது. அதேநேரம் கடந்த சட்டசபைத் தேர்தலை ஒன்றாக எதிர்கொண்ட அதிமுக, பாஜக, பாமக இம்முறை தனித்தனியாகக் களமிறங்குகின்றன. இவை தவிர அமமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளன.

ஆ ராசா
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள 27 வார்டுகளை கொண்ட கூடலூர் நகராட்சியில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து நீலகிரி எம்பி ஆ. ராசா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த திமுகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

அடிமைகள்
அப்போது பொதுமக்களிடையே பேசிய ஆ ராசா, "கடந்த 2014ஆம் ஆண்டு அதிமுக சார்பில் 40 எம்பிக்கள் மக்களவைக்குச் சென்றனர். அவர்கள் மூலம் மத்திய அரசிடம் இருந்து நமக்கு எந்தவொரு திட்டமும் கிடைக்கவில்லை. அந்த 40 பேரும் பாஜகவுக்கு அடிமைகளாகவே இருந்தனர். கடந்த 2019 மக்களவை தேர்தலில் கூட, வட மாநிலங்களில் மோடிக்கு ஆதரவான நிலை இருந்த போதிலும், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. மாநிலத்தில் 39 இடங்களில் திமுக கூட்டணியே வென்றது.

தமிழக எம்பிகள்
தமிழர்களின் கலாசாரம் மற்றும் பண்பாட்டைத் தொடர்ந்து அழிக்க முயலும் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. நீதிமன்றங்களைப் பார்த்துக் கூட பிரதமர் மோடி பயப்படுவதில்லை. ஆனால், மு.க.ஸ்டாலினையும் திமுக எம்பிகளையும் பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார். பிரதமரைக் கட்டுப்படுத்தும் தகுதி தமிழக எம்.பிக்களுக்கு உள்ளது. பொதுவாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் காலத்தில் பிரதமர்கள் நாடாளுமன்றத்திற்கு வருவார்கள். ஆனால், பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை.

கொரோனா காலம்
கொரோனா பரவ தொடங்கிய போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வெளியே கூட வரவில்லை. ஆனால், கொரோனா உச்சத்தில் இருந்த போதும், ஸ்டாலின் வெளியே வந்து மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு உதவிகளைச் செய்தார். கடந்த தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 90 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் ரூ.4 ஆயிரம் நிவாரண தொகை, மகளிருக்கு இலவச பேருந்து சேவை மட்டுமின்றி, கொரோனா காலத்தில் தந்தையை இழந்தால் ரூ.3 லட்சம் வங்கியில் டெபாசிட், தாய்-தந்தை இருவரையுமே இழந்தால் ரூ.5 லட்சம் வங்கியில் டெபாசிட் என மக்கள் நலன் கருதி திமுக அரசு செயல்படுகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications