15 அடி பள்ளத்தில் பாயப் பார்த்த கார்! அதிர்ஷ்டவசமாக விபத்திலிருந்து தப்பிய அமைச்சர் ராமச்சந்திரன்!
நீலகிரி: வனத்துறை அமைச்சர் இளித்துறை ராமச்சந்திரன் சென்ற கார் 15 அடி பள்ளத்தில் பாயவிருந்த நிலையில் ஓட்டுநரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்யச் சென்ற போது இந்த நிகழ்வு நடந்துள்ளது.
கடந்த சில நாட்களாக நீலகிரியில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் மலைப்பாங்கான பல பகுதிகள் சேரும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.

நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டிட கட்டுமானப் பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை அவ்வப்போது அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் ஆய்வு செய்வது வழக்கம். அந்த வகையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் புதிய மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை இன்று பார்வையிடச் சென்றார். அப்போது மழையின் காரணமாக அந்தப் பகுதி சேரும் சகதியுமாக இருந்ததால் மாற்று வாகனத்தில் அமைச்சர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

பிக் அப் ஜீப்
இதையடுத்து தனது இன்னோவா காரில் இருந்து இறங்கி பிக் அப் டிரக்கில் பயணித்து மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் ராமச்சந்திரன். இதையடுத்து தனது காரில் ஏறுவதற்காக மீண்டும் பிக் அப் டிரக் மூலம் அமைச்சர் ராமச்சந்திரன் திரும்பிக் கொண்டிருந்த போது வளைவு ஒன்றில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி முன்பக்க இடதுபுற டயர் பள்ளத்தில் இறங்கியதோடு 15 அடி பள்ளத்தில் பாயவும் முற்பட்டது. இதனிடையே பதற்றப்படாமல் ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டதால் அங்கு நிகழவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டது.

விபத்து தவிர்ப்பு
அமைச்சர் பயணித்த ஜீப் விபத்தில் சிக்கியதால் பதறியடுத்து வந்த அதிகாரிகளும், கட்சிக்காரர்களும் அமைச்சருக்கு ஒன்றும் காயம் இல்லை என்பதை அறிந்த பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனிடையே ஓட்டுநருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்துவிட்டு பிக் அப் ஜீப்பில் இருந்து இறங்கிய அமைச்சர் ராமச்சந்திரன் தனது கார் நிறுத்தப்பட்ட இடத்திற்கு நடந்தே சென்றுவிட்டார். கடந்த சில நாட்களாக நீலகிரியில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் மலைப்பாங்கான பல பகுதிகள் சேரும் சகதியுமாக காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவக் கல்லூரி
இதனிடையே உதகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணிகளை விரைந்து முடிக்கும் நோக்கில் தான் உள்ளூர் அமைச்சரன ராமச்சந்திரனும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனும் அவ்வப்போது அங்கு ஆய்வு நடத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications