கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு..சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய டிஜிபி..சிக்குமா பெருந்தலைகள்
நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கோடநாடு எஸ்டேட் கொள்ளைக்குப் பிறகு அதை மூடி மறைக்க பல சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் தனிப்படை போலீசார் தெரிவித்துள்ள நிலையில் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கடந்த 2017ம் ஆண்டு நடந்த நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றது. எஸ்டேட் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்த ஏராளமான ஆவணங்கள் திருடு போனதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்திப்பட்டு வருகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக்கூடாது என காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கோடாநாடு வழக்கின் பின்னணி
நீலகிரி மாவட்டத்தில் உள்ளது கோடநாடு எஸ்டேட். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரைக்கும் இங்குதான் ஓய்வெடுக்க வருவார். ஜெயலலிதா மறைந்த பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், அந்த எஸ்டேடின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

மர்ம மரணங்கள்
இந்த கொலை கொள்ளைக்குப் பிறகு அடுத்தடுத்து நடந்த விபத்துகள், தற்கொலைகள், மரணங்கள் பலவித சந்தேகங்களை கிளப்பின. அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற விசாரணையில் உருப்படியாக எதுவும் சிக்கவில்லை. கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்கவே முடியாதா என்று அதிமுகவினர் கேள்வி எழுப்பினர்.

வருமான வரி சோதனை
இதற்கிடையில், கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறையினர் சென்னை சிஐடி நகரில் உள்ள, கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் செந்தில்குமாரின் வீட்டில் சோதனை நடத்திய போது சில ஆவணங்களை கைப்பற்றினர். கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களுக்கும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

திமுக ஆட்சியில் மறு விசாரணை
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் வருமான வரித்துறையினர் மூலம் அந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரித்தனர்.

நீடிக்கும் விசாரணை
அதனடிப்படையில் தொழிலதிபர் செந்தில்குமார், அவரது தந்தை தொழிலதிபர் ஆறுமுகசாமி, கோவையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, புதுச்சேரி சொகுசு விடுதி உரிமையாளர் நவீன்பாலாஜி உள்ளிட்ட சிலரிடம் அடுத்தடுத்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவரது உறவினர் விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.

எப்போது முடியும்
மேலும் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய உயிரிழந்த கார் ஓட்டுநர் கனகராஜின் உறவினர்கள், குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

மறைக்கப்பட்ட உண்மைகள்
இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். மேல் விசாரணை நடத்தப்பட்டதில் மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் கிடைத்துள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை தள்ளி வைத்தார்

சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
இதனிடையே கோடநாடு கொலை,கொள்ளை வழக்குகள் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளை போனது என்ன? எதற்காக கொள்ளை நடந்தது அதற்கான சூத்திரதாரி யார் என்பதில் பல மர்மங்கள் உள்ளன. இப்போது கோடநாடு பங்களா கொள்ளை தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்று அதிமுகவில் இருந்தே குரல்கள் எழுந்துள்ளன. விசாரணை சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய பெருந்தலைகள் சிக்குவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications