இன்று முதல் 7 நாட்களுக்கு மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை ரத்து
நீலகிரி: மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்று முதல் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னகவே ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மலை ரயிலில் பயணிப்பதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு முன்பதிவுத் தொகை முழுவதும் திருப்பி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1899ம் ஆண்டு இந்த மலை ரயில் சேவை துவங்கப்பட்டது. கடந்த 2005 ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி மூலமாகவும், குன்னூர் முதல் உதகை வரை டீசலிலும் இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்லும் இந்த மலை ரயிலில் இருந்து மலைகள், அடர்ந்த வனப் பகுதிகள், அருவிகள் என இயற்கைக் காட்சிகளைக் கண்டவாறே பயணம் மேற்கொள்ளும் அலாதியான அனுபவம் கிடைக்கும்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், உதகை வரை நீலகிரி மலை ரயில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பகல் 12.30 மணிக்கு உதகையைச் சென்றடையும். இந்த மலை ரயிலில் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளைச் சேர்ந்த பயணிகளும் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், உதகை மலை ரயில் சேவை பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று முதல் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையே இயக்கப்படும் மலை ரயில் சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மலை ரயிலில் பயணிக்க திட்டமிட்டிருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மலை ரயில் பாதையில் பல இடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக, தண்டவாளங்கள், பாலங்கள் மற்றும் சுரங்கங்கள் ஆகியவற்றில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற உள்ளதால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, விரைவில் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முன்பதிவு தொகை முழுவதும் திருப்பித் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் பயணம் செய்ய விரும்பும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications