Exclusive: மோடி முகம் ஒன்றே போதும்.. இங்கே 40.. மொத்தமா 400.. அடித்துச் சொல்லும் எல்.முருகன்!
நீலகிரி: எங்களின் மிகப்பெரிய ஹீரோ நரேந்திர மோடி. மோடி முகம்தான் பாஜகவிற்கு அடையாளம், அவரது சாதனைகளை வைத்தே 40 தொகுதிகளிலும் வெல்வோம் என நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார் நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன்.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரக் களத்தில் அனல் பறக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ஸ்டார் தொகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது நீலகிரி (தனி) தொகுதி. நீலகிரி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

திமுக - அதிமுக - பாஜக இடையே நேரடியாக மும்முனை மோதல் நிலவும் முக்கியமான களங்களில் ஒன்று நீலகிரி. இந்நிலையில், பாஜக வேட்பாளர் எல்.முருகனுடன் நமது ஒன் இந்தியா தமிழ் நடத்திய நேர்காணலில், எல்.முருகன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
எல்.முருகன் பேசுகையில், "மக்கள் திமுக அரசின் மீது கடுமையான கோபத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் அடிப்படை தேவைகளை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. நாங்கள் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் குடிநீர் வழங்கியுள்ளோம். தண்ணீர் எடுத்துக் கொடுப்பவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. திமுகவின் சுயநல அரசியலுக்காக அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளனர். ஸ்டாலின் மீதும், ஆ.ராசா மீதும் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.
எங்கள் வேல் யாத்திரையின் மூலமாக 2021 சட்டமன்ற தேர்தலில் 4 பாஜக உறுப்பினர்கள் வென்று சட்டமன்றத்திற்கு சென்றார்கள். பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக செய்துள்ள பணிகள், என் மண் என் மக்கள் யாத்திரை தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. புதுச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் வென்று, தேசிய அளவில் பாஜகவுக்கு 400க்கும் மேற்பட்ட இடங்களை வெற்றி பெற்றுக் கொடுப்போம்.
எங்களின் மிகப்பெரிய ஹீரோ நரேந்திர மோடி. மோடி முகம்தான் பாஜகவிற்கு அடையாளம், பலம். உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் நட்டா என பலரும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எங்கள் மிக முக்கியமான தலைவர்கள் தேர்தலில் நின்றாலும் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
1 கோடியே 20 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு மாதந்தோறும் 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு இலவசமாக கொடுத்து வருகிறோம். ஆனால், திமுக அதை மறைத்து வருகிறது. மத்திய அரசின் கால்நடை ஆம்புலன்ஸ் திட்டத்தை பிரதமர் மோடி படம் போட வேண்டுமே என்பதற்காக திமுக அரசு நிறுத்தி வைத்துள்ளது. ஜல் ஜீவன் மிஷன், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என பல திட்டங்களுக்கு தங்கள் ஸ்டிக்கர்களை ஓட்டி, தமிழ்நாடு அரசுக்கு தடையாக இருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications