நீலகிரியில் அதிசயம்.. மலையரசியின் மூக்கை துளைத்த "கோழி ரசம்".. தீபாவளி "கோழிப்பண்டிகை"யின் ஆச்சரியம்
ஊட்டி: பழங்குடி மக்கள் தீபாவளி கொண்டாடுவார்களா? நீலகிரியில் வாழும் படுகர் மக்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்களா? அதை பற்றி அறிந்து கொள்ள முயலும்போதுதான், ஆச்சரியங்கள் பல காத்திருந்தது நமக்கு.. அது என்ன தெரியுமா?
நீலகிரி டாக்குமென்டேஷன் சென்டர் (Nilgiri Documentation Centre) திரு. வேணுகோபால் தர்மலிங்கம் அவர்களை நம்முடைய ஒன் இந்தியா தமிழுக்காக சந்தித்தோம்.. தன்னுடைய 10 வயது தீபாவளி முதல் படுகர்களின் தீபாவளியையும் சேர்த்தே பகிர்ந்துகொண்டார். அதை ஒன் இந்தியா வாசகர்களுக்காக இங்கே தருகிறோம்.

வழிபாடு முறை: 'நீலகிரியை பொறுத்தவரை, படுகர்கள் 4 திசைகளில் பிரிந்து வாழ்கிறார்கள்.. கோத்தகிரி உள்ளிட்ட கிழக்குப்பகுதியை புறங்காடு என்பார்கள்.. நீலகிரியின் வடக்குப்பகுதி தொதநாடு என்பார்கள்.. குன்னூர் உள்ளிட்ட தெற்கு பகுதிகளை மேக்கே நாடு என்பார்கள். நீலகிரியின் மேற்கு பகுதிகளை குந்தா என்போம். குந்த சீம என்றும் சொல்வார்கள். இந்த படுகர்கள் அனைவருக்குமான மூதாதையர் வழிபாடுமுறை ஒன்றுதான்.
1848-ம் ஆண்டுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதன்முதலில் எடுக்கப்பட்டது. அப்போதே பார்சி இனத்தவர்கள், இஸ்லாமியர்கள், குஜராத் ராஜஸ்தான் என வடமாநில மக்கள் நீலகிரியில் வியாபாரத்துக்காக குவிந்துவிட்டார்கள். ஆனால், இவர்களுக்கு உழைப்பதற்கு ஆட்கள் இல்லை.. திருச்சி, சேலம், கோவை, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து உழைப்பாளர்களாக நீலகிரிக்கு வந்தார்கள் தமிழக மக்கள். இவர்களை தொடர்ந்து தென்மாவட்ட மக்கள், தலித் மக்கள் என பலரும் நீலகிரிக்கு வந்தனர்.
உழைப்பாளர்கள்: சாலைகள் போடுவதற்கும், வீடுகளை கட்டுவதற்கும், ரயில்வே பாதைகளை அமைப்பதற்கும், ஏரிகளை தோண்டுவதற்கும் இந்த பணிகளை செய்தனர்.. அந்தவகையில், பைகாரா மற்றும் குந்தா அணைகளையும் தமிழர்கள் கட்டினார்கள். இப்படி பல மாவட்ட மக்கள் நீலகிரியில் தங்கி பணிபுரிந்தபோது, தங்களது தீபாவளி பண்டிகையையும் கொண்டாடி இருக்கிறார்கள்.
குந்தா பகுதியில் அணைகள் கட்டப்பட்டு இருந்தபோது, இதை கவனித்த குந்தா படுகர் மக்களும், தீபாவளியை கொண்டாட துவங்கினார்கள்.. பொதுவாக, படுகர் மக்கள் மாமிசம் சாப்பிட மாட்டார்கள்.. மலைப்பகுதியில அசைவம் சாப்பிடாதது அரிதான விஷயம். ஆனால், படுகர்கள் வேட்டையாடவும் மாட்டார்கள்.. அசைவமும் சாப்பிட மாட்டார்கள்..
தீபாவளி கொண்டாட்டம்: ஆனால், குந்தா படுகர் இன மக்கள் தீபாவளியை கொண்டாட துவங்கியதுமே, மாமிசம் சாப்பிடுவதும் சேர்ந்து கொண்டுவிட்டது. எனினும் அரிதான நிகழ்வின்போதே சாப்பிடுவார்கள். தீபாவளியை "கோழிப்பண்டிகை" என்று அழைப்பார்கள்.. கோழி அடித்து குழம்பு வைத்து குடும்பத்துடன் சாப்பிடுவார்கள்.. இந்தியாவிலே இல்லாத குழம்பு இது..
பார்க்கவே கருகருவென கருப்பாக இருக்கும்.. அதாவது கோழி ரசம் போல வைப்பார்கள். இதற்கான கைப்பக்குவம் அலாதியானது. பாரம்பரியமாக செய்பவர்களாலேயே இந்த கோழி ரசம் செய்ய முடியும். கோழியுடன் கொத்தமல்லியை அதிகமாக சேர்த்து செய்யப்படும் ரசமாகும். முக்கியமான அயிட்டமே இந்த கொத்தமல்லிதான்.. சமைக்கும்போதே அதன் வாசனை மூக்கை துளைத்துவிடும்.
குந்தா என்பது கிராமப்புற பகுதியை போன்றது என்பதால், கோழிரசத்துடன் மட்டுமே பண்டிகையை நிறுத்தி கொள்வார்கள்.. புத்தாடை, பட்டாசு என்பது அவர்களுக்கு அரிதான விஷயம்..
ஆனால், ஊட்டி போன்ற நகர்ப்புறங்களில் பட்டாசு, புத்தாடைகள் உண்டு.. 100 வருடங்களாகவே ஊட்டியில் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது..
டெயிலர்கள்: நான் சிறுவயதில் 60 வருடங்களுக்கு முன்பு தீபாவளி கொண்டாடியதும் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, அப்போதெல்லாம் ராவ் என்று சொல்லக்கூடிய சௌராஷ்டிரர்கள் மட்டுமே டெயிலர்களாக இருந்தார்கள்.. இவர்கள்தான் புத்துணிகளை தைத்து தருவார்கள்.. மிகவும் பொறுமையாக தைத்து தருவார்கள்..
வெங்காய வெடி, குருவி வெடி, ஊசி பட்டாசு இதெல்லாம் ஊட்டியில் அன்றே தாராளமாக கிடைத்தது.. வியாபாரிகள் நிறைய பேர் பட்டாசு கடைகளை வைத்திருந்தார்கள்.. மலைமாவட்டமாக இருந்தாலும், பரந்த நிலப்பகுதி என்பதால், பட்டாசுகள் வெடிக்க நீலகிரியில் எப்போதுமே தடை விதித்தது கிடையாது.
வீடுகள் தோறும் இனிப்புகள் செய்வார்கள்.. வெல்லம், பருப்பு சேர்த்து செய்யப்படும் "போளி"யை போலவே இருக்கும். இதனை படுகர்கள் ஒப்பிட்டு என்பார்கள்.. அதேபோல, கோதுமை ரவையில் ஸ்வீட் போண்டா போல இருக்கும் களிம்பிட்டு என்ற பலகாரத்தை செய்வார்கள்.
விடிய விடிய பலகாரம்: விடிய விடிய இந்த பலகாரம் செய்வது நடைபெறும். விடிந்ததுமே, தங்கள் பகுதியிலிருக்கும் வீட்டுவேலை செய்பவர்கள், தபால்காரர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து, இட்லி, வெஜ் குருமா பரிமாறி, இந்த பலகாரங்களையும் சாப்பிட தருவார்கள்" என்று திகட்ட திகட்ட அந்த தித்திப்பு நிகழ்வுகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications