கொடநாடு காவலாளி ஓம் பகதூரின் பிரேத பரிசோதனையில் திடுக்.. நேபாளம் செல்கிறது கோத்தகிரி போலீஸ்?
நீலகிரி: கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் எப்படி இறந்தார் என்பது குறித்து அவருடன் இருந்த கிருஷ்ண பகதூர் என்ற மற்றொரு காவலாளியிடம் விசாரணை நடத்த போலீஸார் நேபாளம் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் அவரது மறைவுக்கு பின்னர் அந்த பங்களா சசிகலாவின் முழு கட்டுப்பாட்டில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இவர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றவுடன் அந்த பங்களாவில் கொள்ளைச் சம்பவம் நடந்தது.
இதை தடுக்க முயன்ற காவலாளி ஓம் பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். இந்த பங்களாவில் சில முக்கிய ஆவணங்கள், கோப்புகள் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகின.

கொலை கொள்ளை வழக்கு
இந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ், சயான், மனோஜ், உதயன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி முக்கிய குற்றவாளியான கனகராஜ் வாகன விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இரண்டாவது குற்றவாளி
அதே நாளில் கோவை- பாலக்காடு சாலையில் இரண்டாவது குற்றவாளியான சயான் தனது மனைவி, குழந்தையுடன் காரில் சென்ற போது மர்ம வாகனம் மோதியதில் அவரது மனைவியும், குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடைபெற்று ஒரே வாரத்தில் கொடநாடு கணினி பொறியாளர் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெருத்த சந்தேகம்
அடுத்தடுத்த 4 மரணங்களால் இந்த வழக்கில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. சயான், மனோஜ் ஆகியோர் 4 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டபோது காவல் துறை ஊடகங்கள், நீதிபதியிடம் யார் தூண்டுதலின்பேரில் இந்த சம்பவம் நடந்தது என்பது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர்.

விசாரணை நடத்த அனுமதி
ஆனால் அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்தனர். இந்த வழக்கு தற்போது உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கடந்த மாதம் 13 ஆம் தேதி கோத்தகிரி போலீஸார் சயானிடம் மீண்டும் மறு விசாரணை செய்ய வேண்டும் என மனுதாக்கல் செய்தனர். இதை விசாரித்த மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா, சயானிடம் விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.

வாக்குமூலம்
இதையடுத்து கடந்த 17 ஆம் தேதி அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் யாருடைய தூண்டுதலின்பேரில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது உள்ளிட்டவற்றை வாக்குமூலமாக அளித்துள்ளார். சயான் அளித்த வாக்குமூலம் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆதாரங்களை திரட்டுவதற்காக கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் உதகையில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

ஒருவர் மட்டும் ஆஜர்
இந்த நிலையில் இந்த வழக்கு 27 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சயான், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக கருதப்படும் நிலையில் சயான்மட்டுமே ஆஜரானார். காவல்துறை சார்பில் மறு விசாரணை இன்னும் நிறைவு பெறாததால் விரைவில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் கூறியிருந்த நிலையில், இவ்வழக்கு விசாரணை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

காவலாளி கொலை
இதனிடையே கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி ஓம் பகதூர் மற்றும் கிருஷ்ண பகதூர் ஆகிய இருவரும்தான் இரவு காவலில் இருந்துள்ளனர். அப்போது கொள்ளை முயற்சி நடக்க முயன்ற போது ஓம் பகதூரை கொள்ளையர்கள் கை, கால்களை கட்டி தாக்கியதில் அவர் கொல்லப்பட்டார். இதையடுத்து காவலாளி ஓம் பகதூர் உடலை கோத்தகிரி போலீஸார் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் ஆண்டு கைப்பற்றி கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஓம் பகதூர் மூச்சுத்திணறல்
அப்போது பிரேத பரிசோதனையில் ஓம் பகதூர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக கோத்தகிரி போலீஸார் பதிவு செய்தது அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஓம் பகதூர் கொலை செய்யப்பட்ட நிலையில் மூச்சுத்திணறலால் உயிரிழந்ததாக அப்போதைய கோத்தகிரி எஸ்ஐ பதிவு செய்திருப்பதை அறிந்த நீலகிரி மாவட்ட எஸ்பி இதுகுறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார்.

நேரில் பார்த்த மற்றொரு காவலாளி
அத்துடன் ஓம் பகதூரை கொலையாளிகள் கொலை செய்த போது சம்பவத்தை நேரில் பார்த்த கிருஷ்ண பகதூர் என்ற காவலாளி தற்போது நேபாளத்தில் இருப்பதாக அவரை அழைத்து மறு விசாரணை செய்ய காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக விரைவில் கோத்தகிரி போலீஸார் நேபாளம் செல்லவுள்ளனர். அத்துடன் ஓம் பகதூரை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களிடமும் விசாரணை நடத்த காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications