மேளம் அடித்து.. பாட்டு பாடி.. மாலை எல்லாம் போட்டு.. ஒரு அரசு பேருந்தை வரவேற்ற மக்கள்.. ஏன் தெரியுமா?
நீலகிரி: நீலகிரியில் கிராமம் ஒன்றில் பொதுமக்கள் தமிழ்நாடு அரசு பேருந்து ஒன்றை மேளம் அடித்து, பாட்டு பாடி பிரம்மாண்டமாக வரவேற்று உள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன.

இந்தியாவில் அதிக அரசு பேருந்துகள் இயங்கும் மாநிலம் தமிழ்நாடுதான். இந்தியாவில் பல மாநிலங்களில் டெல்லி உட்பட சரியாக பொது போக்குவரத்து சேவை இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் பொது போக்குவரத்து சேவை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் பொது போக்குவரத்து சேவை சிறப்பாக இருந்தாலும் கூட சில கிராமங்களில் போக்குவரத்து முழுமையாக செயல்பட முடியவில்லை. மலை கிராமங்களில் போக்குவரத்து சேவையை ஏற்படுத்துவது மிகவும் கடினமான செயலாக இருக்கிறது.
மலை கிராமங்களில் சாலை அமைப்பதும், அங்கே தொடர் போக்குவரத்து சேவையை ஏற்படுத்துவதும் கடினமான செயலாக உள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் பொது போக்குவரத்து சேவை ஏற்படுத்தப்படாத கிராமங்களில் ஏற்படுத்தப்படும்.

எல்லா கிராமங்களுக்கும் பொது போக்குவரத்து உறுதி செய்யப்படும் என்று மாநில அரசு மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்து துறை சார்பாக இதற்கு அறிக்கையும் கூட வெளியிடப்பட்டது.
அந்த வகையில் நீலகிரியில் இருக்கும் பல்வேறு கிராமங்களுக்கு பேருந்து சேவை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு கிராமங்களுக்கு சாலை அமைத்து, கடினமான மலை பாதையில் பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள செம்மனாரை கிராமத்தில் பேருந்து சேவை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து இத்தனை காலம் கழித்து இங்கு இப்போதுதான் முதல்முறையாக பேருந்து சேவை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கே நேற்று முதல்முறையாக கோத்தகிரி-செம்மனாரை பேருந்து வந்தது.
இதை மக்கள் மேளம் அடித்து, பாட்டு பாடி பிரம்மாண்டமாக வரவேற்று உள்ளனர். கிட்டத்தட்ட திருவிழா தேர் போல இந்த பேருந்தை மக்கள் வரவேற்றனர். மொத்தம் 7 சிறிய கிராமங்களை இணைக்கும் வகையில் இந்த பேருந்து விடப்பட்டு உள்ளது. மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கே ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி எம்பி ஆ ராசா ஆகியோர் இந்த பேருந்தை தொடங்கி வைத்தனர்.
இங்கே மொத்தம் 1000க்கும் அதிகமான குறும்பா, இருளா பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் பயன் அடையும் வகையில் இந்த பேருந்து விடப்பட்டு உள்ளது.

ஒரு நாளைக்கு 3 முறை இந்த பேருந்து சேவை அங்கே இயக்கப்படும். காலை, பிற்பகல், மாலை என்ற நேர இடைவெளியில் இயக்கப்படும். அதன்பின் நாட்கள் செல்ல செல்ல சேவை அதிகரிக்கப்படும். இதற்கு முன் அங்கே மாணவர்கள், மக்கள், பணியாளர்கள் 12 கிமீ தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது.
மலை பாதையில் இவர்கள், விலங்குகளின் அச்சத்தோடு நடந்து செல்ல வேண்டும். மருத்துவ தேவைக்கு கூட இவர்கள் எளிதாக செல்ல முடியாது. தனியார் ஜீப்களை மட்டுமே இவர்கள் நம்பி இருக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் தற்போது இவர்களுக்கு முதல்முறையாக பேருந்து சேவை ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு உள்ளது.
அப்பகுதி மக்கள் இடையே இது பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications