‛ரெட் அலர்ட்' எதிரொலி.. நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நாளை கனமழைக்கான ‛ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கி மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமாகி உள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக காலையில் வெயில் அடித்தாலும், மாலையில் மழை பெய்து வருகிறது.

அதிலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் முற்றிலுமாக குறைந்து இதமான சூழல் நிலவி வருகிறது. அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தான் நீலகிரி,கோவை மாவட்டங்களுக்கு இன்று மழைக்கான ‛ஆரஞ்ச் அலர்ட்' என்பது விடுக்கப்பட்டது. நாளை மற்றும் நாளை மறுநாள் என்று 2 நாட்கள் நீலகிரி மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ‛ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாளையும், நாளை மறுநாளும் நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும்.
பொதுவாக ரெட் அலர்ட் விடுக்கப்படும்போது 24 மணிநேரத்தில் 20 சென்டிமீட்டருக்கு மேலாக மழை பதிவாகலாம். இதனால் நீலகிரி மாவட்டத்துக்கு பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். இந்நிலையில் தான் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நாளை சனிக்கிழமை என்பதால் அரசு பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தனியார் பள்ளிகள் நாளை செயல்படலாம். இதனால் அனைத்து பள்ளிகளுக்கும் முன்னெச்சரிக்கையாக விடுமுறை வழங்க மாவட்ட கல்வி அலுவலர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications